ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் கொழும்பில் 5வது லேனில் உள்ள வீட்டுக்கு வெளியே இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றதுடன், முன்னாள் பிரதமருக்கு 'வீட்டிற்கு செல்லுங்கள்' மற்றும் 'வீட்டில் இருங்கள்' என ஆர்ப்பாட்டக்காரர்கள் பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
பிரதி சபாநாயகர் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுக்கு வாக்களிக்குமாறு எதிர்க்கட்சி எம்.பி.க்களை ரணில் வற்புறுத்துவதைக் காணக்கூடியதாக இந்த வாரம் பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சானக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்ததை அடுத்து இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாக தெரியவருகின்றது .
ஆர்ப்பாட்டக்காரர்கள் ரணிலின் வீட்டிற்கு வெளியே ஒன்று கூடி, ரணிலின் ‘டீல்களை’ நிறுத்தக் கோரி அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர்.முன்னாள் பிரதமர் வீட்டுக்கு வெளியே பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது .
போராட்டம் ஆரம்பமாகி ஒரு மணித்தியாலத்தில் ரணிலின் ஆதரவாளர்கள் குழுவும் அந்த இடத்தில் திரண்டு ரணிலை தலைவராக நியமிப்பதே தற்போதைய நெருக்கடிக்கு ஒரே தீர்வு எனக் கூறி போராட்டத்தை ஆரம்பித்தனர். அப்போது ரணில் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து போலீசார் நிலைமையை அமைதிப்படுத்தினர்.
தம்மைச் சந்திக்க விரும்பினால், திங்கட்கிழமை சிறிகொத்தவுக்கு வருமாறும், அங்கு கலந்துரையாடுமாறும் முன்னாள் பிரதமர் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு செய்தியொன்றை அனுப்பியதை அடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்