ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இன்று (12) தெரிவித்தார்.
புதிய அமைச்சரவையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தீர்மானம் எடுத்துள்ளதாகக் கூறப்படும் விடயத்திற்கு கொழும்பு பேராயர் கொழும்பில் செய்தியாளர்களிடம் அதிருப்தி வௌியிட்டார்.விக்ரமசிங்க பாராளுமன்றத்தின் ஒரு பிரதிநிதி மட்டுமே, அவர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருக்கவில்லை. இந்த நியமனம் சட்டப்பூர்வமானது அல்ல, தற்போது இந்த நாட்டில் உள்ள மக்கள் விரும்பும் தீர்வு இதுவல்ல
என்றும் கொழும்பு பேராயர் குறிப்பிட்டார்.
அரசியலில் தோற்கடிக்கப்பட்ட, மக்களால் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட ஒரு நபரை அல்ல, மரியாதைக்குரிய நேர்மையான நபரையே மக்கள் விரும்புகிறார்கள் எனவும் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
அனைத்து மக்களின் நம்பிக்கையைப் பெறக்கூடிய ஒரு நபரையே மக்கள் விரும்புவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மகாநாயக்க தேரர்கள் கட்சி சார்பற்ற நபரை பரிந்துரைக்கின்றனர். அந்த பரிந்துரைக்கு என்னவானது என்பது அனைவரின் யூகமாக உள்ளது. தற்போதைய நெருக்கடியிலிருந்து எதிர்காலத்தில் நம்பிக்கையுடன் முன்னேறுவது அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம், இந்த அமைப்பில் முழுமையான மாற்றம் தேவை. அது தற்போதைய பாராளுமன்ற கட்சிகளின் தலைவர்கள் மூலம் நடக்க முடியாது. இந்த நாட்டின் அனைத்து பிரஜைகளின் நம்பிக்கையை வென்றெடுக்கக்கூடிய ஒரு பக்கசார்பற்ற நபரால் மட்டுமே அது நிகழ முடியும்
என்றும் மால்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மேலும் குறிப்பிட்டார். ரணில் விக்ரமசிங்கவின் பதவியேற்பு விழாவை இரத்து செய்ய வேண்டும் எனவும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தினார். கலாநிதி ஓமல்பே சோபித்த தேரருடன் கொழும்பில் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனை கூறினார்.