காலிமுகத்திடலுக்கு முன்பாகவும், அலரிமாளிகைக்கு முன்பாகவும் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு உறுதுணையாக இருந்த குற்றச்சாட்டில், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று தனிநபர் மனு தாக்கல் செய்யப்பட்டது.
1979 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 136 (1) (a) இன் கீழ் சட்டத்தரணி சேனக பெரேராவால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சஞ்சீவ எதிரிமான்ன, சனத் நிஷாந்த மற்றும் மொரட்டுவை மாநகர சபையின் தலைவர் சமன் லால் பெர்னாண்டோ, மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் சாமர ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.
இந்த மனு இன்று (13) கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன்படி, இலங்கையின் தண்டனைச் சட்டத்தின் 140, 144, 146, 149, 150, 154, 157, 314, 315, 316, 343, 483, 486 ஆகிய பிரிவுகளின்படி சட்டவிரோதக் கூட்டத்தை நடத்துவதும் அதன் அங்கத்துவத்தை வைத்திருப்பதும் கலவரம் , பொது ஊழியரைத் தாக்குதல் மற்றும் இடையூறு செய்தல், பொதுமக்களைத் தூண்டிவிட்டு கலவரத்தைத் தூண்டுதல், கலவரத்தைத் தூண்டுதல், வேண்டுமென்றே கடுமையான உடல் காயம் செய்தல், கிரிமினல் வற்புறுத்தல், சித்திரவதை மற்றும் கிரிமினல் மிரட்டல் ஆகிய குற்றங்கள் செய்யப்பட்டதாக மனுதாரர் தரப்பு வாதிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அனைத்து சந்தேக நபர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும், குற்றவியல் சட்டத்தை மீறிய குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் சந்தேக நபர்களுக்கு பிடியாணை அல்லது அழைப்பாணை பிறப்பிக்குமாறும் மனுதாரர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார்.