இந்த ஆமதுருக்கள் அரசியலில் வேண்டாம். கைகூப்பி கோருகிறேன். இவர்கள்தான் இத்தனைக்கும் காரணம்.சும்மா இந்த வன்முறைகளைப் பற்றி, இந்த பக்கமும், அந்த பக்கமும் மாறி, மாறி குற்றம் சாட்டுவதில் பயனில்லை. அனைத்துக்கும் மூல காரணம் இந்த ஆமதுருகள்தான். இவர்களை பன்சலைக்கு அனுப்புங்கள். அரசியலில் இவர்கள் வேண்டாம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற சபையில் இன்று ஆளும் கட்சி எம்பிகளின் மீது கடந்த சில நாட்களாக நடத்தப்பட்ட வன்முறைகள் தொடர்பில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே சிங்கள மொழியில் ஆவேசமாக இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இன்றைய தினங்களில், 2009 ஆண்டில் தமிழ் மக்கள், நூறு, ஆயிர, இலட்சக்கணக்கில், கொல்லப்பட்டார்கள். கண்மூடித்தனமான எறிகணை தாக்குதல்களில் கொல்லப்பட்டார்கள்.
இன்று ஆளும் அணி அமைச்சர்களின் வீடு, சொத்துகளை எரித்து கொலை செய்த இந்த வன்முறை, அமரகீர்த்தி என்ற அப்பாவி எம்பியை அடித்தே கொலை செய்த வன்முறைகள், இந்த யுத்தம் மற்றும் 1983, 1977, 1958 இனக்கலவரங்களிலேயே ஆரம்பித்தது. இந்த தீவைப்பு தமிழர்களாகிய எங்களுக்குப் புதிதல்ல. 1983 எங்கள் ஹவ்லக் வீதி வீட்டைக் கொளுத்தினார்கள்.
எங்கள் புறக்கோட்டை வியாபார நிலையத்தைக் கொளுத்தினார்கள். ஒரு கம்பீரமான திரைப்பட கலைஞரான என் தந்தை அதன்பின் மனமுடைந்து சில காலம் வாழ்ந்து இறந்து போனார். இதோ இந்த ஆசனத்தில்தான் என் நண்பன் ரவிராஜ் அமர்ந்திருந்தார்.
சிங்கள மக்களுக்குத் தமிழர் பிரச்சினையைச் சிங்களத்தில் சொல்ல முயன்றதற்காக ரவிராஜ் கொல்லப்பட்டார். அன்று நானும், ரவியும் சேர்ந்து பலவந்த கடத்தல், சட்ட விரோத படுகொலைகள், வெள்ளை வேன் கலாச்சாரத்துக்கு எதிராகப் போராடினோம்.
என்னையும், ராகமை, களுத்துறை, தெமட்டகொடை ஆகிய மூன்று இடங்களில் கொல்ல முயன்றார்கள். இந்த வன்முறை ஆட்டம்தான் இன்றும் தொடர்கிறது. முதல் அரசியல் கொலையை, 1959இல் பண்டாரநாயக்காவை கொலை செய்து, ஒரு பெளத்த ஆமதுரு ஆரம்பித்து வைத்தார். அதன்பின் பெளத்த மதத்தை அரசியலில் கலக்க விட்டு, இந்நாட்டை அழித்து விட்டீர்கள்.
இந்த ஆமதுருக்கள் அரசியலில் வேண்டாம். கைகூப்பிக் கோருகிறேன். இவர்கள்தான் இத்தனைக்கும் காரணம். நாம் ஆமதுருமார்களை பன்சலைக்கும், குருக்கள்மார்களை கோவிலுக்கும், இமாம்களை பள்ளிவாசல்களுக்கும், பாதிரிகளைத் தேவாலயங்களுக்கும் போகச் சொல்வோம். இவர்கள் இங்கே வேண்டாம். அரசியலில் வேண்டாம்.
களனி விகாரை ஆமதுரு சொன்னார். களனி கங்கை ஆறு இரண்டாகப் பிளந்ததாம். 'டோம்' என சத்தம் வந்ததாம். பாதாளத்திலிருந்து நாகராஜன் வந்தாராம். 'நாட்டை காக்க ஒரு மன்னன் வருகிறான்' என ஒரு அசரீரி கேட்டதாம். என்ன ஒரு கேலிக்கூத்து இது! இப்படி வெட்கமில்லாமல் சொன்ன அந்த ஆமதுரு இன்று களனி பல்கலைக்கழக உப வேந்தராம். வெட்கம்..!
சும்மா இந்த வன்முறைகளைப் பற்றி, இந்த பக்கமும், அந்த பக்கமும் மாறி, மாறி குற்றம் சாட்டுவதில் பயனில்லை. அனைத்துக்கும் மூல காரணம் இந்த ஆமதுருகள்தான். இவர்களை பன்சலைக்கு அனுப்புங்கள். எங்கள் குருக்கள், இமாம்கள், மாதிரிகள் ஆகியோரும் தத்தம் மத ஸ்தலங்களுக்குப் போக வேண்டும். நாடு உருப்படும்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.