web log free
March 29, 2024

கோட்டா கோ கம மீதான தாக்குதலை தடுக்க வேண்டாம் என உத்தரவிட்ட நாட்டின் முக்கிய புள்ளி!

காலிமுகத்திடலில் போராட்டக்காரர்கள் தாக்கப்படும்போது அதனை பொலிஸார் தடுக்க வேண்டாமென பொலிஸ்மா அதிபரும், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் பொலிஸாருக்கு உத்தரவிட்டனர் என்பதே உண்மை என ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ரமேஸ் பத்திரன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

காலிமுகத்திடலில் போராட்டக்காரர்கள் தாக்கப்படுவதற்கு முன்னர் நான் மேல்மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு தொலைபேசி ஊடாக அழைப்பை எடுத்து வன்முறைச் சம்பவம் தொடர்பில் எச்சரித்து இதனை பொலிஸார் தடுத்து நிறுத்த வேண்டும் என்றேன். அப்போது இதனை நாம் தடுத்து நிறுத்துவோம் என்றே தேசபந்து தென்னகோன் என்னிடம் கூறினார். எனினும் அலரிமாளிகையில் இருந்து வந்தவர்கள் காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டோரைத் தாக்கினார்கள். 

இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க எனக்கு தொலைபேசியில் அழைப்பை எடுத்து இது தொடர்பில் கூறியதோடு, உடனடியாக ஜனாதிபதிக்கு இதனை அறிவித்து தடுத்துநிறுத்த வேண்டும் என கூறினார் என்றார்.

அப்போது நான் ஜனாதிபதியுடன் கூட்டமொன்றில் இருந்தேன். அங்குப் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் என்னோடு இருந்தார்கள். உடனே விடயத்தை நான் ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறியதும், அப்போதே தேசபந்து தென்னகோனுக்கு அழைப்பை ஏற்படுத்திய ஜனாதிபதி என்ன செய்துக் கொண்டிருக்கிறீர்கள் நான் காலையிலேயே கூறினேன் தானே இதனை எடுக்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறியதற்கு பொலிஸ்மா அதிபர் கண்ணீர்புகைப் பிரயோகம் மேற்கொள்ள வேண்டாமென தனக்கு உத்தரவிட்டுள்ளதாக தென்னகோன் கூறினார்.

இதன்போது ஆத்திரமடைந்த ஜனாதிபதி நானே இந்நாட்டின் ஜனாதிபதி. நான் சொல்கிறேன் இதனை தடுத்து நிறுத்துங்கள் என ஜனாதிபதிக் கூறியதன் பின்னரே பொலிஸார் கண்ணீர்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டனர் எனவும் ரமேஸ் பத்திரன தெரிவித்தார்.