web log free
April 25, 2024

வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் 10 வருட தங்குமிட விசா வழங்க முடிவு

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட வெளிநாட்டினருக்கான நீண்ட கால வீசா வழங்கும் திட்டத்தை நாட்டிற்குள் அந்நிய செலாவணி வரும் ஒரு வழியாக அறிமுகப்படுத்தியுள்ளது.

'கோல்டன் பாரடைஸ் விசா' என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் வெளிநாட்டினருக்கு ஆன்லைனில் விசா வழங்க முடியும்.

இதன்படி, இலங்கை மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக வங்கியில் குறைந்தது ஒரு இலட்சம் டொலர்களை (100000) வைப்பிலிடும் வெளிநாட்டவருக்கு 10 வருட காலத்திற்கு இலங்கையில் வதிவிட விசா வழங்கப்படும்.

வைப்புச் செய்யும் வெளிநாட்டவர்கள் முதல் வருடத்திற்குப் பிறகு $50,000 திரும்பப் பெறுவதற்கான விருப்பம் உள்ளது, ஆனால் மீதமுள்ள $ 50,000 குறைந்தபட்ச இருப்புத் தொகையாக தொடர்புடைய கணக்கில் வைக்கப்பட வேண்டும்.

இங்கு சம்பந்தப்பட்ட வெளிநாட்டவர் உட்பட குடும்ப உறுப்பினர்கள் இந்த விசா வசதியின் பலன்களை அனுபவிக்க முடியும்.

மேலும், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் படி, இலங்கையில் குறைந்தபட்சம் $75,000 அல்லது அதற்கு மேற்பட்ட சொத்துக்களை (சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள்) செலவழிக்கும் வெளிநாட்டவர்களுக்கு 5 முதல் 10 ஆண்டுகளுக்கு வதிவிட விசா வழங்கப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.