மாங்குளம் பிரதேசத்தில் 10 வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞரொருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் குறித்த வழக்கு நேற்று(08) தீர்ப்பிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
தாம் இரு தடவைகள் குறித்த இளைஞரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக சிறுமி சாட்சியமளித்துள்ளார். சிறுமியின் சாட்சியத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், குற்றவாளியான இளைஞருக்கு 10 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 4 இலட்சம் ரூபா நஷ்ட ஈடு செலுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், அதனை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 02 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என அறிவித்துள்ளார்.
20,000 ரூபா அபராதத்தையும் செலுத்த வேண்டும் என குற்றவாளிக்கு உத்தரவிடப்பட்டதுடன், அதனை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 02 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மாங்குளம் பகுதியைச் சேர்ந்த 30 வயதான இளைஞர் ஒருவருக்கே இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 2017 மார்ச் மாதம் பாடசாலைக்கு சென்ற 10 வயதான சிறுமியை குறித்த இளைஞர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக குற்றஞ்சாட்டி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.