web log free
March 28, 2024

இறைச்சி துண்டுக்கு விலங்குகள் அடித்துக் கொள்வது போன்ற நிலை மக்கள் மத்தியில் ஏற்படும்

இறைச்சிக்காக காட்டு விலங்குகள் சண்டையிட்டுக்கொள்வதை போன்ற ஒரு நிலைமை நாட்டில் உருவாவதை தடுக்க முடியாது என்று சுகாதார தொழில்வல்லுனர்களின் அமைப்பின் தலைவர் வைத்தியர் ரவி குமுதேஷ; தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் நாடு பாரிய சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளது. விசேடமாக நாட்டு மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

நாட்டை நிர்வகிக்க முடியாது என்பதை அரசாங்கம் தற்போதைய நிலையில் உறுதிப்படுத்தியுள்ளது.இன்னும் சில நாட்களில் இவ்விடயமானது மேலும் உறுதிப்படுத்தப்படும்.

தற்போதைய நிலையில் அரச சேவைக்கு இரண்டு வார விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கூடாக அரச சேவையினூடாக பெற்றுக்கொள்ளக்கூடிய விடயங்கள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு பெற்றுக்கொள்ள முடியாமல் போகும். அவ்வாறு பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்ப்புகளும் இல்லை.

சில சந்தர்ப்பங்களில் நாடு முடக்கத்துக்கு செல்லலாம்.

இவ்வாறான ஒரு நெருக்கடி நிலைமை காணப்படும்போது நாட்டை நிர்வகிப்பவர்கள் எவ்வாறு நிர்வாக செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்கள் என்ற விடயத்தை நாம் எமது மனவருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.நாடு தற்போது பேரழிவை எதிர்கொண்டுள்ளது.

பேரழிவிலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டியது போன்றே நாட்டை தற்போது முகாமைத்துவம் செய்ய வேண்டும்.

அவ்வாறு முகாமைத்துவம் செய்வதற்கு நாட்டைப்பற்றி சிந்திக்கக்கூடிய தரப்பினர் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும்.

எனினும் நாட்டைப் பற்றி சிந்திக்காத தங்களது வீடுகளுக்கு தீமூட்டிய விடயங்களைப் பற்றி கதைப்பவர்களும் மீண்டும் அதிகாரத்துக்கு வருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவர்களும் பாராளுமன்றத்தில் உள்ளனர்.

பெரும்பான்மையான அரசியல்வாதிகள் தற்போதைய நிலையில் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாத நிலையிலேயே இருக்கின்றனர்.

மீண்டும் எவ்வாறு அரசியலுக்கு வரலாம் என்பது குறித்து மட்டுமே அவர்கள் சிந்தித்து செயலாற்றி வருகின்றனர்.

இவ்வாறானவர்களுடன் அரசாங்கமும் பாராளுமன்றமும் தொடர்ச்சியாக முன்கொண்டு செல்லப்படுமாயின் அவ்வாறான ஒரு ஜனாதிபதியின் கீழ் இந்த நாடு முன்கொண்டு செல்லப்படுமாயின் கடந்த மே மாதம் 09 ஆம் திகதி ஏற்பட்ட நிலைமையைவிட மிகவும் மோசமான ஒரு நிலைமை நாட்டில் உருவாகும்.

மக்களுக்கு இடையே முரண்பாடுகள் வெடிப்பதை தடுக்க முடியாது.

இறைச்சித் துண்டுக்காக காட்டு விலங்குகள் சண்டையிட்டுக்கொள்வதை போன்று அல்லது குரங்குக் கூட்டங்கள் சண்டையிட்டுக்கொள்வதை போன்ற நிலைமை உருவாவதை தடுக்க முடியாது.