web log free
April 19, 2024

கரடிக்கு பயந்து மூன்று நாட்களாக மரத்தில் இருந்த இளைஞர்

காட்டில் தன்னைத் துரத்தி வந்த பெரிய கரடி ஒன்றிடமிருந்து தப்புவதற்காக இளைஞர் ஒருவர் ஓடிச் சென்று மரத்தில் ஏறியுள்ளார்.

ஆனால் கரடி அந்த இடத்தை விட்டு நகரவில்லை. அக்கரடி அங்கிருந்து செல்லும் வரை மூன்று நாட்களை மரத்திலேயே கழித்த அந்த இளைஞரை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இரண்டு நாட்கள் தேடுதல் மேற்கொண்டு நண்பகல் வேளையில் கண்டுபிடித்துள்ளார்கள்.

இவ்வாறு காட்டில் காணாமல் போய் கண்டுபிடிக்கப்பட்டவர் திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் 10 ஆம் கொலனியைச் சேர்ந்த சாகுல் ரிஸ்வான் எனப்படும் 22 வயது திருமணமான இளைஞராவார்.

தம்பலகாமம் ஈச்சங்குளம் காட்டுப் பகுதியில் மாடுகளை வளர்க்கும் தனது மைத்துனர் இருக்கும் இடத்திற்கு செல்வதற்காக கடந்த 16 ஆம் திகதி காலை காட்டின் வழியே பயணம் செய்கையில் அவர் இவ்வாறான சம்பவமொன்றுக்கு முகம் கொடுத்துள்ளார்.

இந்த இளைஞர் காட்டில் காணாமல் போயுள்ளதாக அவரின் மனைவி கடந்த 17ஆம் திகதி தம்பலகாமம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து அங்கு கடமையாற்றும் பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான பொலிஸ் பரிசோதகர் நாக்காலந்த முள்ளிப்பொத்தானை திஸ்ஸபுர இராணுவ முகாமுக்கு பொறுப்பான கேர்ணல் ராஜகுருவை தொடர்பு கொண்டு அவர்களின் உதவியை கோரினார்.

வனவிலங்கு பிரிவினரையும், கிராமத்து மக்களையும் இணைத்து தேடுதல் நடவடிக்கை ஒன்றை அவர் மேற்கொண்டார். அன்று இரவு வரை தேடிய போதும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

அவ்வாறு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டவர்கள் யானை மற்றும் கரடிகளின் அச்சுறுத்தலுக்கும் முகம் கொடுத்தார்கள். அவற்றை விரட்டியக்க வனவிலங்கு பிரிவினர் நடவடிக்கை எடுத்தார்கள்.

மறுநாளும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதோடு அதற்காக மேலதிக படையணியினரும் கிராமத்தினருடன் இணைந்து கொண்டார்கள். அன்று பகல் காணாமல் போயிருந்த இளைஞர் குட்டையொன்றில் நீர் அருந்தும் போது கிராமத்தவர்களும் மற்றும் இராணுவத்தினரும் கண்டுள்ளார்கள்.பின்னர் அவரின் அருகில் சென்று அவரை மீட்டுள்ளார்கள்.

அவரின் உடம்பில் கீறல்கள் மாத்திரமே காணப்பட்டதாகவும் வேறு எதுவித காயங்களும் காணப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தார்கள்.

இவ்வாறு மீட்கப்பட்ட இளைஞன் பின்னர் தான் முகம் கொடுத்த சம்பவம் பற்றி இவ்வாறு விவரித்தார்.

"நான் எனது மைத்துனருக்கு தொலைபேசி அழைப்பொன்றை எடுத்த பின்னர் அவர்கள் இருக்கும் இடத்திற்கு செல்ல ஆயத்தமானேன். நான் காட்டில் நடந்து கொண்டிருக்கும் பொழுது பெரிய கரடி ஒன்றைக் கண்டேன். அது என்னைப் பார்த்தவுடன் என்னை துரத்தத் தொடங்கியது. நான் அதனிடம் இருந்து தப்பிக் கொள்வதற்காக ஓடினேன். எவ்வளவு தூரம் ஓடினேன் என்று எனக்கு ஞாபகத்தில் இல்லை.

நான் நன்றாகப் பயந்திருந்தேன். அதன் பின்னர் ஒரு பெரிய மரத்தில் ஏறிக் கொண்டேன். இரவு முழுவதும் மரத்திலேயே இருந்தேன், தூங்கவில்லை. அடுத்தநாள் இறங்கி பாதையை தேடிக் கொண்டு வந்தேன். நான் தொடர்ந்தும் காட்டுக்குள்ளேயே சென்றுள்ளேன். தொலைபேசிக்கும் 'சிக்னல்' கிடைக்கவில்லை. எனக்கு 'சிக்னல்' கிடைத்த போது நான் தகவலை வீட்டாரிடம் கூறினேன். பின்னர் தொலைபேசியை நிறுத்தி வைத்துக் கொண்டேன்.

காட்டில் பழங்களை உண்டு, அன்று இரவும் ஒரு குட்டையில் நீரை அருந்து விட்டு மரத்தில் ஏறி இருந்து கொண்டேன். அன்றைய இரவையும் மிகுந்த பயத்துடன் மரத்திலேயே கழித்தேன். எந்தவித வெளிச்சமும் இருக்கவில்லை.

எனது மரத்தைச் சுற்றி மிருகங்களின் சத்தமே கேட்டது. காலையில் நான் அருகிலிருந்த குட்டையில் நீர் அருந்தும் போது கிராமத்து மக்களையும் இராணுவத்தையும் கண்டேன். என்னை கிராமத்துக்கு அழைத்து வந்தார்கள். நான் அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்".

இவ்வாறு அந்த இளைஞர் விபரித்தார்.

இந்தச் சம்பவம் பற்றி தம்பலகாமம் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நாக்கந்தல கூறியதாவது:

"இந்த இளைஞன் காணாமல் போனமை தொடர்பாக முறைப்பாடு கிடைத்தவுடன், நான் எனது உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இராணுவம் மற்றும் வனவிலங்கு பிரிவினர் சிலருடன் பாரிய தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு இளைஞரைக் கண்டுபிடித்தோம்.

கரடி துரத்திய வேளையில் அந்த இளைஞர் கிராமத்துப் பக்கம் ஓடாமல் எதிர்த்திசையில் ஓடியே காட்டுக்குள் வெகுதூரம் சென்று காணாமல் போயுள்ளார். இவரை குளத்துப் பகுதியில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் அனுராதபுரம் மாவட்ட எல்லையில் கண்டுபிடித்தோம். தற்போது காடுகளில் தேன் உள்ளது. அதனை உட்கொள்வதற்காக கரடிகள் வருவதுண்டு.

இந்தக் காட்டுக்குள் மக்கள் நுழைவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் மாடு வளர்ப்பவர்கள் அவற்றை மேய்ப்பதற்காக காட்டிற்குள் செல்கிறார்கள். வனவிலங்கு அதிகாரிகள் அதற்குத் தடை சொல்வதில்லை. நான் கிராமத்தவர்களுக்கு காட்டுக்குள் அநாவசியமாக நுழைய வேண்டாம் எனக் கூறுகின்றேன்.

அத்துடன் இந்த நடவடிக்கையில் இணைந்து கொண்ட பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர், வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் கிராமத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்".

இவ்வாறு பொலிஸ் பரிசோதகர் நாக்கந்தல தெரிவித்தார்.