960 மணிநேரமே என் இலக்கு - முடியாவிட்டால் பதவி துறந்து வீடு செல்வேன் என அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் மேலும் கூறுகையில்,
"மக்கள் பட்டினியால் வாடினால், நாம் மட்டும் உண்பதில் அர்த்தம் இல்லை. ஆக, சென்று எதையாவது செய் எனக்கூறியே - அம்மா என்னை நாடாளுமன்றம் அனுப்பி வைத்தார்.
6 மாதங்களுக்குள் உங்களாலும் முடியாவிட்டால் - பதவி துறந்து வாருங்கள் என மனைவியும் அறிவுரை வழங்கியுள்ளார். அதேபோல 'தாத்தா கம் ஹோம்' (அப்பா வீட்டுக்கு வாங்க) - என பதாகை ஏந்தப்படும் என பிள்ளைகளும் அறிவித்துவிட்டனர்.
அந்த வகையில் எனக்கான காலம் 6 மாதங்கள். அதாவது 960 மணித்தியாலங்களே எனக்கு வேலை செய்வதற்கான நேரம். அந்த காலப்பகுதிக்குள் முன்னேற்றகரமாக எதையாவது செய்யாவிட்டால், 'தாத்தா கம் ஹோம்' எனக்கூறி பிள்ளைகள் எனது வீட்டுக்கு முன் வந்து விடுவார்கள். அப்போது எனக்கு வீடு செல்ல வேண்டிவரும்.
என்னை போல் ஒருவருக்கு 6 மாதங்களுக்குள் மக்களுக்கு முன்னேற்றகரமான எதையாவது செய்ய முடியாவிட்டால், பதவி வகித்து என்ன பயன்? "
இவ்வாறு இலங்கையில் உள்ள பிரபல கோடிஸ்வர வர்த்தகரும், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சருமான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.