2019ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட விவாதத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரபிரசாதம் மீறப்பட்டதாக தெரிவித்து, சாபாநாயகர் கரு ஜயசுரியவிடம் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன, குறித்த முறைப்பாட்டினை சபாநாயகரிடம் முன்வைத்துள்ளார்.
2019 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் கடந்த மார்ச் மாதம் 5 ஆம் திகதி நிதியமைச்சர் மங்கள சமரவீரவால் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
பின்னர், வரவு - செலவுத் திட்டம் மீதான விவாதம் மார்ச் 6 ஆம் திகதி ஆரம்பமாகி 12ஆம் திகதி வரை இடம்பெற்றதுடன், வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
பின்னர், வரவு -செலவுத்திட்டம் தொடர்பான நாடாளுமன்ற குழுநிலை விவாதங்கள் மார்ச் 13 ஆம் திகதி ஆரம்பமாகி ஏப்ரல் மாதம் ஐந்தாம் திகதி வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
இந்த நிலையில், வரவு - செலவுத் திட்ட விவாதத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரபிரசாதம் மீறப்பட்டதாக சாபாநாயகர் கரு ஜயசுரியவிடம் பந்துல குணவர்தன முறைப்பாடு ஒன்றினை முன்வைத்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டினை இன்றைய தினம் கடிதம் ஊடாக மூலம் சபாநாயகரின் செயலாளரிடம் தானே நேரில் சென்று ஒப்படைத்துள்ளதாக பந்துல குணவர்தன கூறியுள்ளார்.
ஐக்கிய தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹாசு மாரசிங்க ஆற்றிய உரையின் மூலம் தனது நாடாளுமன்ற வரபிரசாதம் மீறப்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டில் பந்துல குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.