web log free
April 30, 2025

ஜனாதிபதி ரணில் தலைமையிலான சர்வகட்சி அரசாங்கத்திற்கு கூட்டமைப்பு முழு ஆதரவு

தேசிய பிரச்சினைகள் தீர வேண்டுமெனில் சர்வகட்சி அரசாங்கம் மிகவும் அவசியம், இதற்கு எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கம் அமைக்க ஆதரவு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுப்பிய கடிதம் தொடர்பில் வினவியபோதே அவர் இக்கருத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

"சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்துக்கு தாம் இன்னமும் பதில் அளிக்கவில்லை.

எனினும், சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி நடத்தவுள்ள மாநாட்டில் தாம் பங்கேற்பதாகவும் தம்மால் இயன்ற அனைத்து ஒத்துழைப்பையும் வழங்குவோம்.

நாட்டினுடைய பிரச்சினை, நாட்டு மக்களுடைய பிரச்சினை தீர வேண்டுமெனில் சர்வகட்சி அரசாங்கம் மிகவும் அவசியம். இதற்கு எமது பரிபூரண ஒத்துழைப்பை வழங்குவோம்.

பொருளாதாரப் பிரச்சினை மாத்திரமல்ல அரசியல் பிரச்சினைகள், சமூகப் பிரச்சினைகள் எனச் சகல தேசிய பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு எம்மால் இயன்ற ஒத்துழைப்பை சர்வகட்சி அரசாங்கத்திற்கு வழங்குவோம்.

ஏனெனில் ஒரு பிரச்சினையைத் தீர்த்து மற்றைய பிரச்சினைகளைத் தீர்க்காதுவிட்டால் நாட்டில் முன்னேற்றம் ஏற்படாது. எனவே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண ஜனாதிபதிக்கும் அவர் தலைமையில் அமையவுள்ள சர்வகட்சி அரசாங்கத்திற்கும் நாங்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்குவோம்'' என தெரிவித்துள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd