உயர் பணவீக்கம் காரணமாக சுமார் 630,000 இலங்கையர்கள் உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
உலக உணவுத் திட்டம் இதனைக் காட்டுவதாகவும், அத்தியாவசிய உணவு, மருந்து, எரிபொருள், உரம் போன்றவற்றைக் கூட வழங்க முடியாமல் இலங்கையர்கள் பெரும் ஆபத்தில் உள்ளதாகவும் அவர் கூறினார்.
பிலிப்பைன்ஸின் மணிலாவில் ஆரம்பமான சர்வதேச தலைமைத்துவ மாநாட்டிலேயே முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த மாநாடுகளை அமைதிக்கான சர்வதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கம் மற்றும் உலக அமைதி மாநாட்டின் ஆசிய பசிபிக் பிராந்தியம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்தன.
முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது:
ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாக உள்நாட்டுப் போர்ச் சூழல் காரணமாக வீழ்ச்சியடைந்திருந்த இலங்கையின் பொருளாதாரம் 2009ஆம் ஆண்டு யுத்த மோதல்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் மூலம் மீண்டு வருமென இலங்கையர்கள் மட்டுமன்றி சர்வதேச சமூகமும் எதிர்பார்த்தது.
ஆனால், எமது நாடு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பது உங்களுக்குத் தெரியும். அந்த நெருக்கடியால் ஏற்பட்ட அரசியல் ஸ்திரமின்மையும், மக்களின் வாழ்க்கை சீர்குலைவுகளும் தாங்க முடியாதவை. நான் மேற்கூறிய விடயங்களை நிறுவாமல் யுத்தம் முடிவடைந்த பின்னர் நெருக்கடி நிலைக்குச் சென்ற நாடு என்பதற்கு இலங்கை உதாரணம் என்று கூறுவது வருந்தத்தக்கது.
இலங்கையின் முன்னாள் அரச தலைவர் என்ற வகையில் இந்த இக்கட்டான நேரத்தில் உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பையும் சகோதரத்துவத்தையும் எதிர்பார்க்கின்றேன் என்று அவர் கூறினார்.