web log free
May 10, 2025

ஆறு இடங்களில் வெடிப்பு சம்பவங்கள்!

இலங்கையின் ஆறு இடங்களில் வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில், குறித்த பகுதிகளில் மக்கள் குழுமியிருப்பதனை தவிர்க்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

கொழும்பு - கொச்சிகடை, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மூன்று தேவாலயங்களில் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், கொழும்பிலுள்ள ஷங்ரீ லா, கிங்ஸ்பரி மற்றும் சினமன் க்ரான்ட் ஆகிய நட்சத்திர ஹோட்டல்களிலும் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற பகுதிகளுக்கு அருகாமையில் மக்கள் சூழ்ந்திருப்பதனை தவிர்க்குமாறு அவர் கோரியுள்ளார்.

மக்கள் ஒன்றுகூடுவது ஆபத்தானது எனவும் விசாரணைகளுக்கு இடையூறாக அமையும் எனவும், காயமடைந்தவர்களை வைத்தியசாலைகளில் அனுமதிப்பதிலும் சிக்கல் நிலைமை ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும், வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்ற பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவத்தில் பலர் காயமடைந்திருப்பதாகவும், உயிரிழந்தோர் பற்றிய விபரங்களை தற்போதைக்கு அதிகாரபூர்வமாக வெளியிட முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு தேசியவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்மவர்களில் 23 பேர் உயிரிழந்திருப்பதாவும், மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd