சர்வகட்சி அரசாங்கத்திற்கு பதிலாக தேசிய அரசாங்கத்தை நிறுவுவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சர்வகட்சி அரசாங்கத்தில் கட்சிகளாக இணைவதை விடுத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் தனித்தனியாக அரசாங்கத்தில் இணைந்து கொள்வதால் தேசிய அரசாங்கத்தை அமைப்பதே பொருத்தமானது என அரசியல் கட்சிகள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளன.
பத்தொன்பதாவது அரசியலமைப்புத் திருத்தத்தில் அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கையை முப்பதிலிருந்து நாற்பத்தி இரண்டாக அதிகரிக்கக்கூடிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அமைச்சரவை அடுத்த வாரம் பதவியேற்கவுள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைச்சரவைக்கு நியமிக்கப்படவுள்ள 16 உறுப்பினர்களின் பட்டியலை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளது.
மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அங்கத்துவக் கட்சிகளின் தலைவர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளன.
30 இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்.
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, நாமல் ராஜபக்ஷ, எஸ். எம். சந்திரசேன, மஹிந்தானந்த அளுத்கமகே, பவித்ரா வன்னியாராச்சி மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் அமைச்சர் பதவிகள் வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.
இவர்களில் நால்வருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டாம் என எதிர்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
ஜீவன் தொண்டமான், ஏ.எல்.எம். அதாவுல்லா போன்ற கட்சித் தலைவர்களுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவிகளை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதிக்கும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்று (17) இரவு முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.