web log free
September 20, 2024

அதிக அமைச்சுப் பதவி கேட்ட மொட்டுக் கட்சியினருக்கு 'நோ' சொன்னார் ரணில்!

உத்தேச சர்வகட்சி அல்லது தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அதிக அமைச்சுப் பதவிகளைக் வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மறுத்துவிட்டதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அங்கு கூடுதலான அமைச்சரவை அமைச்சர் பதவிகள் மற்றும் இராஜாங்க அமைச்சர் பதவிகள் கோரப்பட்ட போது, ​​சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட வேண்டிய பதினாறு பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சமர்ப்பித்துள்ளது. அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நாமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க வேண்டாம் என எதிர்க்கட்சியில் இணையவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதியுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தாமல், கட்சியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர்களும் தமக்கு உடனடியாக இராஜாங்க அமைச்சர் பதவிகளை வழங்குமாறு பசில் ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் இன்னும் பதினைந்து நாட்களில் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி கருதுகின்றார்.

இதேவேளை, இம்முறை இராஜாங்க அமைச்சர்களின் நிறுவனங்களை வர்த்தமானியில் வெளியிடாதது தொடர்பான யோசனையும் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர்களின் நிறுவனங்களை தனித்தனியாக வர்த்தமானியில் வெளியிட்டிருந்தார்.