web log free
November 29, 2024

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான தகவல்

நல்லாட்சிக் காலத்தில் நடைபெற்றதைப் போன்று அரசியல் கைதிகளின் விடுதலை கண்துடைப்பு நாடகமாக அமைந்துவிடக் கூடாது என ஜனாதிபதி சட்டத்தரணி K.V.தவராசா தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் கருத்துகளை வெளியிட்டமைக்காக 2017, 2019 ஆம் ஆண்டுகளில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் சிலரை விடுதலை செய்து விட்டு, 12 முதல் 26 வருடங்கள் வரை சிறைகளிலுள்ள 46 அரசியல் கைதிகளின் விடுதலையை தவிர்த்துவிடக்கூடாது என தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சிக் காலத்தில் 217 அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்குறுதியளித்துவிட்டு, சந்தேகத்தின் பேரில் கைது செய்து வழக்குத் தாக்கல் செய்வதற்கு போதிய சாட்சியங்களற்ற 61 கைதிகளை பிணையிலும் 23 கைதிகளை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பியும் விடுதலை செய்ததாக குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சட்டமா அதிபரினால் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, நீதிமன்றங்களினால் தண்டணை விதிக்கப்பட்ட அரசியல் கைதியோ அல்லது மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு, வழக்கு விசாரணைக்குட்பட்டிருந்த அரசியல் கைதியோ அரச தரப்பினருடன் நடைபெற்ற பேச்சுவார்தைகளின் போது இன்று வரை விடுதலை செய்யப்படவில்லை எனவும் ஜனாதிபதி சட்டத்தரணி K.V.தவராசா தெரிவித்துள்ளார்.

நல்லாட்சிக் காலத்தில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்த கைதிகள் விடுதலை செய்யப்படும்போது தற்போதைய நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவே அப்போதைய நீதி அமைச்சராக செயற்பட்டவர் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd