web log free
December 22, 2024

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியவர்களுக்கு நன்றியை தெரிவித்த ஜனாதிபதி

சீரற்ற காலநிலையின் காரணமாக பல இன்னல்களுக்கு முகங்கொடுத்த வடக்கு மாகாண மக்களுக்கு துரித நிவாரணங்களை வழங்கியதுடன், அவர்களின் நலன்புரி தேவைகளுக்காக தொடர்ச்சியாக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட முப்படையினர், பொலிஸார், மாகாண ஆளுநர்கள், அரச அதிகாரிகள், தன்னார்வ நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நன்றி தெரிவித்துள்ளார்.

அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த வடபுல மக்களுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் வழிகாட்டலின் கீழ் இந்த விசேட நிவாரண வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் முப்படையினர் துரிதமாக செயற்பட்டதுடன், அவர்களின் அர்ப்பணிப்பின் காரணமாக உயிர் மற்றும் உடமைகளின் சேதங்களை குறைக்க கூடியதாக இருந்தது.

பாதுகாப்பு துறையினர் மற்றும் ஏனைய அரச அதிகாரிகள் இரவு பகலாக சேவையாற்றி அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த மக்களுக்கு தேவையான நிவாரணப் பணிகளை தொடர்ச்சியாக வழங்கி வந்தனர்.

தனது நாட்டின் சகோதர மக்கள் அனர்த்தத்திற்குள்ளான சந்தர்ப்பத்தில் தமது கடமைகளை சரிவர நிறைவேற்றி, மனிதாபிமான சேவைக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றிய அனைவரின் சேவையையும் ஜனாதிபதி பாராட்டியுள்ளார்.

Last modified on Friday, 04 January 2019 13:23
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd