முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் மொஹமட் ரூமி ஆகியோர், தாங்கள் குற்றமிழைக்கவில்லை என்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அறிவித்தனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சர்ச்சைக்குரிய வெள்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்துக்கு இடையூறு விளைவித்தனர் குற்றச்சாட்டின் பேரில் இருவருக்கும் எதிராக சட்டதா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த வழக்கின் சாட்சிய விசாரணை, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தோட்டவத்த முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.
அதன்பின்னர் பிரதிவாதிகள் இருவரும் தாம் குற்றமற்றவர்கள் என்று மன்றுக்கு அறிவித்தனர்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது கொழும்பில் சகல வல்லி ஆராச்சிகே சரத் குமார மற்றும் அதுல சஞ்சீவ மதநாயக்க ஆகிய இரு நபர்களை வைத்து ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.
அதில், வெள்ளை வான்களில் ஆட்களை கடத்திச் சென்றமை மற்றும் கொள்ளை, கொலை உள்ளிட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் பொய்யான தகவல்களைப் பரப்பி அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரத்துக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் இருவருக்கும் எதிராக சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.