web log free
November 29, 2024

நாடும் அரசாங்கமும் வங்குரோத்து நிலையில்-சஜித் பிரேமதாஸ

நாடும் அரசாங்கமும் வங்குரோத்து நிலையிலுள்ள இவ்வேளையில் அரச அதிகாரம் இன்றி, ´மூச்சு´ த்திட்டத்தினையும், ´பிரபஞ்சம்´ தகவல் தொழிநுட்பத் திட்டத்தினையும் நிறைவேற்றுவது குடிமக்கள் என்ற வகையில் இது சமூகக் கடமையும் பொறுப்புமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று (15) அம்பாறையில் தெரிவித்தார்.

74 ஆண்டுகால அரசியல் குறித்து மக்கள் மத்தியில் நிலவும் விரக்தி நியாயமானதுதான் என்றாலும், தான் உட்பட ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியில் இருந்த வன்னம் அரசாங்கத்தை மட்டும் விமர்சிக்காமல், மக்களை வாழவைக்கவும், எதிர்கால சந்ததியினரின் கல்விக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் நடவடிக்கைளை முடிந்தவரை எடுத்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் குடிமக்களை வாழ வைப்பது தன் மீது சுமத்தப்பட்ட சமூகக் கடமை எனவும், நாடு நெருக்கடியான சூழலை எதிர்நோக்கி வரும் இந்நேரத்தில் அமைச்சுகளைப் பெற்று, மக்களுக்கு மேலும் சுமைகளை அதிகரிப்பதை விடுத்து, எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு நாட்டு மக்களுக்கு வழங்க முடியுமான உயர்ந்த பட்ச உதவிகளை வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் வைத்தியசாலைக்கட்டமைப்பு நெருக்கடியை எதிர்நோக்கும் இத்தருணத்தில், ´மூச்சு´ வேலைத்திட்டத்தின் ஊடாக நாட்டு மக்களின் உயிரைக் காக்க எதிர்க்கட்சியாக தானும் தனது பாராளுமன்ற உறுப்பினர் குழுவும் எப்போதும் முன் நிற்பதாகவும் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

தற்போதைய ஜனாதிபதி பிரதமராக இருந்த போது நாட்டைக் கட்டியெழுப்ப உதவுமாறு கேட்ட சந்தர்ப்பத்தில் பதவிகளை எடுக்காமல் சுகாதாரம், கல்வித்துறைகளை கட்டியெழுப்ப உதவுவதாக தான் உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.

சுகாதாரத் துறைக்கு மூச்சுத் திட்டமும், கல்வித் துறைக்கு பிரபஞ்சம் தகவல் தொழில்நுட்பத் திட்டமும் தொடங்கப்பட்டு, இதனூடாக எதிர்க்கட்சி என்ற ரீதியிலும் தனது கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.

அமைச்சர்களுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை சுகாதாரத் துறைக்கு பயன்படுத்துவதன் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்படும் எனவும், ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியாக, குறைந்த செலவில் அதிக வேலைகளைச் செய்து தமது சமூகப் பொறுப்பை நிறைவேற்றுவதையே இந்நேரத்தில் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியினால் அமுல்படுத்தப்படும் ´மூச்சு´ வேலைத்திட்டத்தின் 52 ஆவது கட்டமாக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு 35 இலட்சம் ரூபா (ரூ.3,500,000) பெறுமதியான Dialysis இயந்திரமொன்றை நன்கொடையாக வழங்கும் நிகழ்வில் நேற்று(15) கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதற்கு முன்னர் 51 கட்டங்களில், 1562 இலட்சம் (ரூ.56,216,900) மதிப்பிலான மருத்துவமனை உபகரணங்களை ´மூச்சு´திட்டத்தின் மூலம் வழங்க ஐக்கிய மக்கள் சக்தியால் முடிந்துள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd