முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மீண்டும் அரசியலுக்கு வருமாறு பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், அரசியலில் ஈடுபடாமல் சாதாரண வாழ்க்கையை வாழ்வதே முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நோக்கமாக உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, தாய்லாந்தில் இருந்து இலங்கை வந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த பதினைந்து நாட்களாக கொழும்பு மலலசேகர மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியிருந்தார்.
கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்க தினமும் ஏராளமான அரசியல்வாதிகள், இராஜதந்திர அதிகாரிகள் மற்றும் நண்பர்கள் வந்து செல்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன போன்ற அரசாங்கத் தலைவர்களும் அடங்குவர்.
இதுதவிர உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் கூட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பார்க்க அதிக அளவில் வந்துள்ளனர்.
ராஜபக்சேவை சந்திக்க சிலர் குழுக்களாக வந்தமையும் சிறப்பு.
கோட்டாபய ராஜபக்ஷ ஹுனுபிட்டிய கங்காராமவிற்கு வந்து சமய வழிபாடுகளை மேற்கொள்ளுமாறு ஆலய நிர்வாக அதிகாரி கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரரிடமிருந்து அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதி தனது மனைவியுடன் கொழும்பு ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரைக்கு சென்று மத வழிபாடுகளை மேற்கொண்டார்.
கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தலைமையிலான மகாசங்கத்தினர் முன்னாள் ஜனாதிபதிக்கும் அவரது மனைவிக்கும் செத்பிரித் ஓதி ஆசீர்வதித்திருந்தனர்.
துறவறம் பூண்ட பக்தர்கள், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் சிநேகபூர்வமாக உரையாடியதுடன் அவர்களில் சிலர் முன்னாள் ஜனாதிபதிக்கு நேர்ந்ததற்கு வருத்தம் தெரிவித்தனர்.
கடந்த புதன்கிழமை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நெலும் குளுன வளாகத்திற்கு விஜயம் செய்தார். இந்நிகழ்வில் நெலும் குளுன திட்டத்தின் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்கவும் கலந்துகொண்டார்.
அதன்படி தாமரை கோபுரத்தின் உச்சிக்கு சென்று அவதானித்த முன்னாள் ஜனாதிபதி, சிநேகபூர்வ உரையாடலின் பின்னர் அவ்விடத்தை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.