"வடக்கில் தமிழ் மக்களின் காணிப் பிரச்சினை, காணாமல்போனவர்கள் தொடர்பான பிரச்சினை ஆகியவற்றுக்குத் தீர்வு காண வேண்டும். அதிகாரப் பகிர்வின் சில அடிப்படைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும்."
- இவ்வாறு பிரிட்டன் வாழ் இலங்கையர்கள் முன்னிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தற்போதுள்ள நெருக்கடிக்களை வெற்றிகொண்டு, வளமான தேசத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று பிரிட்டன் வாழ் இலங்கையர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.
அத்துடன், புலம்பெயர் அலுவலகப் பணிகள் உள்ளிட்ட இலங்கையில் உள்ள புதிய முதலீட்டு வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள பிரிட்டன் சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் பிரிட்டன் வாழ் புலம்பெயர் இலங்கையர்களுக்கும் இடையில் நேற்றுப் பிற்பகல் சந்திப்பு நடைபெற்றது.
பிரிட்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில் பிரிட்டன் வாழ் இலங்கை வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள், தொழில் வல்லுநர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
புதிய அரசின் எதிர்கால திட்டங்கள் குறித்து இதன்போது விளக்கமளித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கையில் உள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகளில் இணைந்து கொள்ளுமாறு பிரிட்டன் வாழ் இலங்கையர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
பிரிட்டனின் புதிய மன்னரின் தலைமையில் பொதுநலவாய நாடு என்ற வகையில், எதிர்கால சவால்களை இலங்கை வெற்றிகொள்ளும் என்றும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.
இங்கு உரையாற்றும்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவிக்கையில்,
"எதிர்காலத்தில் நாம் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து பொதுநலவாய செயலாளர் நாயகத்துடன் கலந்துரையாடவுள்ளோம். பொதுநலவாய அமைப்பு வலுவடைந்து முன்னேறிச் செல்ல வேண்டும். அதேபோன்று இங்கிலாந்துக்கு உள்ள பிரச்சினைகளை அவர்கள் வெற்றிகரமாக தீர்த்துக்கொள்வார்கள்.
இங்கிலாந்து எங்களுடன் நீண்டகால நட்பு கொண்டுள்ளது. எமது நாடு ஐக்கிய இராச்சியத்தின் ஆட்சியின் கீழ் இருந்தபோதும், சுதந்திர நாடாக நாம் இங்கிலாந்துடன் சிறந்த உறவுகளைப் பேணி வருகின்றோம்.
எங்கள் உறவு நீண்ட காலமாகத் தொடர்கின்றது. இங்கிலாந்துடன் உடன்படும் சந்தர்ப்பங்களைப் போன்றே, உடன்படாத சந்தர்ப்பங்களும் இருக்கின்றன.
ஆட்சியில் இருப்பது தொழிற்கட்சி அல்லது கன்சர்வேடிவ் கட்சி அல்லது கூட்டணி என எதுவாக இருந்தாலும் , நாங்கள் இங்கிலாந்துடனான எமது உறவைத் தொடர்ந்து பேணவே விரும்புகின்றோம்.
எமது நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்துள்ளது என்பது இரகசியமல்ல. இந்தப் பிரச்சினையை நாமே தீர்க்க வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சர்வதேச நாணய நிதியத்துடனான அதிகாரிகள் மட்ட ஒப்பந்தத்தில் ஏற்கனவே கையெழுத்திட்டுள்ளோம்.
நாம் இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுடனும் தனியார் கடன் வழங்குநர்களுடனும் பேச்சு நடத்த வேண்டும். நாம் பெற்றுள்ள கடன்களையும் அடைக்க வேண்டும்.
கடனை அடைப்பதற்கு இன்றிலிருந்து 25 ஆண்டுகள் வரை செல்லும். அதாவது 2048 இல், இலங்கை சுதந்திரம் பெற்று 100 ஆண்டுகள் நிறைவடையும் சந்தர்ப்பத்தில் இலங்கை சுபீட்சமான நாடாக உருவாக முடியும். அச்சமயத்தில் நம்மில் பலர் உயிருடன் இருக்கமாட்டோம். ஆனால், அதற்குப் பங்களித்தவர்களாக இருப்போம்.
அரசியல் செயற்பாடுகளில் இளைய தலைமுறையினரின் கருத்துக்களை எப்படி உள்வாங்குவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
உங்களுக்கு ஜனநாயகம் வேண்டும் என்றால் நிலையான ஆட்சி, ஒழுக்கம் மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பன இருக்க வேண்டும்.
வீடுகளை எரிப்பதா அல்லது அலுவலகங்களைக் கைப்பற்றுவதா என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாது. அது ஜனநாயகம் அல்ல. ஜனநாயகம் என்பது சட்டத்தின் ஆட்சியின் கீழ் செயற்படுவதாகும்.
இலங்கையில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சில தரப்பினர் வன்முறையில் ஈடுபட்டனர். நாம் அவர்களின் கருத்துக்களைக் கண்காணிப்புக் குழுக்களில் சேர்த்துள்ளோம். நாடாளுமன்றத்தில் 19 கண்காணிப்புக் குழுக்கள் உள்ளன. அவற்றில் ஐந்து இளைஞர் பிரதிநிதிகளை நியமிக்க இருக்கின்றோம். வேறு எந்த நாடும் அவ்வாறு செய்தது கிடையாது.
கண்காணிப்புக் குழுவால் அனுப்பப்படும் எந்த அறிக்கைக்களுடனும் மேலதிக ஆவணமாக இளைஞர்களின் கருத்துக்களை சமர்ப்பிக்கலாம். எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு அவர்களின் தேவைகளின் பிரகாரம் நாட்டை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும். அவர்களை இணைத்துக் கொள்ளக் கூடிய பல்வேறு வழிகளைக் கண்டறிய வேண்டும்.
கரு ஜயசூரிய மற்றும் விக்டர் ஐவன் ஆகியோர் கிராம சேவகர் மட்டத்தில் மக்கள் சபைகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
வடக்கில் தமிழ் மக்களின் காணிப் பிரச்சினை, காணாமல்போனவர்கள் தொடர்பான பிரச்சினை, அவர்களுக்கு உரிய நட்டஈடு வழங்குவது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை என்பவற்றுக்குத் தீர்வு வழங்க வேண்டும். அதிகாரப் பகிர்வின் சில அடிப்படைகளைக் கவனிக்க வேண்டும்.
2018ஆம் ஆண்டு அரசமைப்பைத் திருத்த நாம் நடவடிக்கை எடுத்தபோது வடக்கு, கிழக்குக்கு வெளியில் உள்ள ஏழு முதலமைச்சர்களும் எதிர்க்கட்சித் தலைவரும் யோசனைகளை முன்வைத்தமை மகிழ்ச்சியளிக்கின்றது. வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும், முதலமைச்சர்களும் அதற்கு உடன்பட்டுள்ளதால் எமக்கு அதனைத் தொடர முடியும். அதனை நிறைவேற்ற முடியும் என்றும் நம்புகின்றேன்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து வளமான தேசமாக எமது நாட்டை மாற்ற வேண்டும். இங்கே வாழ்வதால் நீங்கள் வெற்றி அடைந்திருப்பீர்கள்.
இங்கு வாழும் சுமார் 5 இலட்சம் இலங்கையர்கள், தங்களை முதல் அல்லது இரண்டாம் தலைமுறை இலங்கையர்களாக அடையாளப்படுத்துகின்றனர். வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள், புலம்பெயர் மக்களாக அழைக்கப்படுகின்றனர். புலம்பெயர் அலுவலகம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான பணி முன்னெடுக்கப்படுகிறது.
வெளிவிவகார அமைச்சு அதைச் செயற்படுத்தி வருகின்றது. அது ஜனாதிபதியின் அலுவலகத்தின் கீழ் இருக்கும். சில காலங்களின் பின்னர் அது வெளிவிவகார அமைச்சின் கீழ் கொண்டுவரப்படும். ஆனால், இந்த அலுவலகம் வெற்றிபெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். நாம் அனைவரும் இதில் கைகோர்க்க வேண்டும்.
வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் முதலீடு செய்ய முடியும். உங்களில் சிலருக்கு தெற்கு அல்லது கிழக்கில் தொடர்புகள் இருக்கலாம். அவர்களுக்கு உதவியளிக்க விரும்பலாம். அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. உங்களால் முடிந்த விதத்தில் இலங்கைக்கு உதவுங்கள்" - என்றார்.
ஐக்கிய இராச்சியத்துக்குத் தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதியின் ஆலோசகரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான ருவன் விஜேவர்தன, முதற் பெண்மணி சிரேஷ்ட பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்க, பிரிட்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சரோஜா சிறிசேன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.