web log free
July 01, 2025

கடும்போக்குவாத ஞானசார தேரரிடம் ஏற்பட்ட திடீர் மாற்றம்

சவூதி அரேபியாவின் 92வது தேசிய தின கொண்டாட்டம் நேற்று (23) பிற்பகல் கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் வெகு விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் பிரதமர் தினேஷ குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க மற்றும் பிரசித்திபெற்ற அதிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் விசேட அதிதியாக கலந்து கொண்டமையே இந்த தேசிய தின நிகழ்வின் விசேட அவதானமாகும்.

முஸ்லீம் தீவிரவாதத்த்திற்கு எதிராக கடுமையாகச் செயல்பட்டு, சவுதி அரேபிய அமைப்புகளை பல சந்தர்ப்பங்களில் கடுமையாக விமர்சித்து வந்த ஞானசார தேரரின் வருகை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது என்பது சமூக வலைதளங்களை அவதானித்தால் தெளிவாகிறது.

பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகளில் இருந்து பல வருடங்களாக விலகியிருந்த அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி விரிவுரையாளர் டிலந்த விதானகேயும் ஞானசார தேரருடன் இணைந்து தனது மனைவியுடன் இந்த தேசிய தின நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.  

இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக சவுதி இளவரசர் சல்மான் மிதமான கொள்கையை கடைபிடித்து வரும் நிலையில், சவுதி தூதரக துறைகள் பல்வேறு அணுகுமுறைகளுடன் செயல்படுகின்றன என்ற முடிவுக்கு பொதுபல சேனா அமைப்பு வந்துள்ளது.

இதன்படி, ஞானசார தேரர் தலைமையிலான பொதுபல சேனா அமைப்பின் பிரதிநிதிகளுக்கும், சவுதி அரேபிய தூதுவர் அதிகாரிகளுக்கும் இடையில் அண்மையில் பல சுற்றுக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. சர்வதேச ரீதியில் பௌத்த, முஸ்லிம் பிரச்சினைகளை ஆராய்ந்து பௌத்த – முஸ்லிம் நட்புறவை ஏற்படுத்துவதற்கு முன்னின்று செயற்படுமாறு சவூதி அரேபிய இராஜதந்திர திணைக்களங்கள் ஞானசார தேரரைக் கேட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd