web log free
November 29, 2024

கோட்டா தலைமையில் கைவிடப்பட்ட ஜப்பான் திட்டம் ரணில் தலைமையிலான மொட்டு ஆட்சியில் தொடக்கம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோஷிமாசா ஹயாஷியை (Yoshimasa Hayashi) இன்று காலை டோக்கியோவில் சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின் போது சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் பேச்சுவார்த்தையின் முன்னேற்றத்தை வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி வரவேற்றார். அத்துடன் இலங்கைக்கான கடன் வழங்குனர்களுடன் நடத்தப்படும் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையில் ஜப்பான் முன்னணி பங்கை வகிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கையின் கடந்த ஆட்சியில் பல முதலீட்டுத் திட்டங்களை இரத்துச் செய்ததைத் தொடர்ந்து ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது குறித்து ஜனாதிபதி விக்ரமசிங்க இதன்போது வருத்தம் தெரிவித்தார்.

அந்த திட்டங்களை மீள ஆரம்பிக்க எதிர்பார்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையின் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களில் ஜப்பான் முதலீடு செய்ய வேண்டும் என்பதில் இலங்கை அரசாங்கம் ஆர்வம் காட்டுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களில் முதலீடு செய்வதில் ஜப்பான் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் இதற்கமைய எதிர்கால முதலீட்டு வாய்ப்புகளை இலங்கையில் மேற்கொள்வது குறித்து ஆராய தயாராக இருப்பதாகவும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி இதன்போது தெரிவித்தார்.

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கான தேர்ச்சியுற்ற தொழிலாளர் பரீட்சையை 2023 ஜனவரியில் ஜப்பான் ஆரம்பிக்கும் என்றும் வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச அரங்கில் இலங்கைக்கு ஜப்பான் வழங்கி வரும் ஒத்துழைப்பைப் பாராட்டிய ஜனாதிபதி , ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள், நிரந்தர உறுப்புரிமை பெறுவதற்காக மேற்கொள்ளும் பிரச்சாரத்திற்கு இலங்கை அரசாங்கம் ஆதரவளிப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதியின் இந்தக் கருத்தை வரவேற்ற ஜப்பான் வெளிவிவகார அமைச்சர், சர்வதேச அரங்கில் ஆசியாவிற்கு வலுவான பிரதிநிதித்துவம் தேவை என்றும் வலியுறுத்தினார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd