2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான வழக்கு தொடர்பான நீதிமன்ற உத்தரவு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் தன்னை சந்தேகநபராகக் குறிப்பிட்டு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட நோட்டீசை இடைநிறுத்த உத்தரவிடுமாறு கோரி இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 16ஆம் திகதி, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கில் நீதிமன்றில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த வழக்கில் முன்னாள் ஜனாதிபதியை சந்தேக நபராக பெயரிட்ட கோட்டை நீதவான் நீதிமன்றம், 2022 ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மைத்திரிபால சிறிசேனவை உத்தரவிட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல்களில் சிறீசேனாவை குற்றம் சாட்டப்பட்டவராக குறிப்பிடுமாறு கோரிய தனிப்பட்ட மனுவை பரிசீலித்த நீதிமன்றம், தாக்குதல்களைத் தடுக்கத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிக்கான தேசிய கத்தோலிக்க கமிட்டியின் உறுப்பினர் ஒருவரால் இந்த தனியார் மனு தாக்கல் செய்யப்பட்டது.