ஐக்கிய மக்கள் சக்தியின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தில் எதிர்க்கட்சி மூன்று உறுப்பினர்களுக்கு அமைச்சரவை பதவிகள் வழங்கப்படவுள்ளன.
இந்த மூன்று எம்பிக்களுக்கும் பெரும்பாலும் நிதி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் பதவிகள் கிடைக்கும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டியவர்களின் பட்டியலும் அண்மையில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனினும் நிரந்தர அமைச்சரவை நியமனம் மேலும் தாமதமாகும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர் பதவியை வகிக்க வேண்டிய 12 பேரின் பட்டியல் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மொட்டுவுக்கு 12 அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுமாயின், எஞ்சிய கட்சிகளுக்கு அமைச்சரவை அமைச்சுப் பதவிகளை வழங்குவதிலும் சிக்கல் ஏற்படும்.
ஏனைய கட்சிகளைச் சேர்ந்த ஜீவன் தொண்டமான் மற்றும் அதாவுல்லா இருவருக்கும், ஐக்கிய தேசியக் கட்சியினால் நியமிக்கப்பட்ட வஜிர அபேவர்தன மற்றும் அரசாங்கத்தில் இணையவுள்ள துமிந்த திஸாநாயக்க ஆகிய இருவருக்குமே ஜனாதிபதி அமைச்சுப் பதவிகளை வழங்குவார் என அறியப்படுகிறது.