கால்நடை வள அமைச்சின் கீழ் இயங்கும் மில்கோ தனியார் நிறுவனத்தை இலாபம் ஈட்டும் பொது நிறுவனமாக மாற்றுவதற்கான புதிய வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர உயர் நிர்வாகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மில்கோ நிறுவனம் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ள போதிலும் கடந்த வருடத்தின் சில மாதங்களை விட இந்த வருடத்தின் சில மாதங்களில் அதிக வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருட இறுதிக்குள் குறைந்தபட்சம் 8,500 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்ட முடியும் என நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகம் அமைச்சரிடம் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் 20-30 மில்லியன் ரூபா இலாபத்தை ஈட்டியுள்ளதாகவும் இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரை 7,774 மில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நாட்டில் கறவை மாடுகளை வளர்ப்பதற்கான தாய் விலங்குகள் பற்றாக்குறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே கறவை மாடுகளைப் பெறுவதற்கு இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுடன் இந்திய அரசாங்கம் கலந்துரையாடியதாகவும் பேச்சுவார்த்தை வெற்றியடையும் என்றும் விவசாய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பாகிஸ்தானில் இருந்து கறவை மாடுகளை பெற்றுக் கொள்வதற்கு இந்த நாட்டிலுள்ள பாகிஸ்தான் தூதுவருடன் கலந்துரையாட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பரான பொதுஜன பெரமுனவின் ஆளும் செயலாளர் ரேணுகா பெரேரா மில்கோ நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.