ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பில் சில தீர்க்கமான முடிவுகளை எடுக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
இதேவேளை, கட்சியின் மிக முக்கிய 4 பதவிகளை மாற்றுவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் கட்சிக்குள் ஏற்கனவே உரையாடலை ஏற்படுத்த முடிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கேற்ப கட்சியின் பொதுச் செயலாளர், தலைவர், தேசிய அமைப்பாளர், பொருளாளர் பதவிகள் மாற்றப்பட உள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்த பாலித ரங்கே பண்டார தொடர்பில் கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள நிலையில், முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு அந்த கட்சியின் செயலாளர் நாயகம் பதவியை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதியின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சி கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இவ்வேளையில், ரவி கருணாநாயக்க சிறந்த தெரிவு என ரணில் விக்கிரமசிங்க உறுதியாக நம்புவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி ஆலோசகர் பதவியில் செயற்படுவதால், தேசிய அமைப்பாளர் கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றுவதற்கு கால அவகாசம் கிடைப்பதில் சிரமம் உள்ளதால், அவரை தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து விடுவிக்குமாறு, தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
எவ்வாறாயினும், ரவி கருணாநாயக்கவின் பெயரைத் தவிர, ஏனைய பதவிகளுக்கு யார் நியமிக்கப்படுவார்கள் என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.