22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் இன்றும் நாளையும் விவாதிக்கப்படவுள்ளது.
அதன் இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பு நாளை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
சில அரசியல் கட்சிகளுக்கிடையில் கூட கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் பின்னணியில் 22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் இன்று விவாதிக்கப்படுகிறது.
இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று வரைவில் கூறப்பட்டதே இதற்கு நெருங்கிய காரணம்.
22வது அரசியலமைப்பு திருத்த வரைபு மீதான வாக்கெடுப்பு தொடர்பில் இதுவரையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள இருபத்தி இரண்டாவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் ஆளும் கட்சிக் குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குழுக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்றதுடன், 22ஆவது திருத்தத்துக்கு எதிராக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் கருத்து வெளியிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அங்கு கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் எந்தவொரு திருத்தத்தையும் ஆதரிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.
19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக வாக்களித்ததாகவும், 22ஆவது திருத்தத்துக்கு எதிராகவும் வாக்களிப்பதாக முன்னாள் அமைச்சர் கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
22ம் திருத்தச் சட்டத்தை ஆதரிப்பது வேடிக்கையானது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிராக பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் வாக்களிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குழுவாக இணைந்து தீர்மானம் எடுக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அரசாங்கம் கொண்டு வந்த பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்தின் தரப்பினரால் முடியாது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஜனதா சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு, இணக்கம் காணப்பட்டதன் பிரகாரம் 22வது அரசியலமைப்பு திருத்த வரைவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தனர்.
பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு 22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவளிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.