web log free
December 14, 2025

சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள ஹம்மர் அதிசொகுசு வாகனம்

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட ஹம்மர் வாகனம் , பறிமுதல் செய்யப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஏலத்தில் இறக்குமதி செய்த நபருக்கு வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான எழுத்து மூலமான கோரிக்கை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் ஆலோசனையின் பேரில் அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவினால் இன்று (21) பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி பிரதமரின் உத்தரவின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்க உள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதற்கு முன்னர் சுங்கப் பணிப்பாளர் நாயகத்திடம் அறிக்கை கோரியதுடன், அந்த அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனம் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டது.

பின்னர் அது பறிமுதல் செய்யப்பட்டு, பின்னர் நடந்த பொது ஏலத்தில், சம்பந்தப்பட்ட காரை இறக்குமதியாளரே வாங்கினார்.

இந்த சம்பவம் தொடர்பில் உடனடி அறிக்கையை வழங்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, சுங்கப் பணிப்பாளர் நாயகத்திற்கு முன்னர் உத்தரவிட்டிருந்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd