2022 ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சாரக் கட்டணத்துடன் 2.5% சமூகப் பாதுகாப்பு வரி சேர்க்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று (26) தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையினால் மேற்கொள்ளப்படும் மின்சார விநியோகம் அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிக்கு (SSCL) உட்பட்டுள்ளதால் வரி சேர்க்கப்படும் என PUCSL தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியானது மின்சார கட்டணத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்து தெளிவுபடுத்திய ரத்நாயக்க, மின்சார சபையிடமிருந்து மின்சாரம் பெறும் நுகர்வோர் உட்பட தரப்பினரால் மின்சாரத்தை கொள்வனவு செய்யும் போது குறித்த வரியை CEB வசூலிக்கும் என்றார்.
“சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி மின்சாரத் தொழிலை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து மின்சார நுகர்வோர் உட்பட மின்சாரத் துறையில் உள்ள பல்வேறு தரப்பினரும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். மின் கட்டணங்கள் சமீபத்தில் திருத்தப்பட்டதால், இந்த வரியிலிருந்து மின் நுகர்வுக்கு விலக்கு அளிக்க நிதி அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்தோம். குறித்த சட்டத்தின் பிரகாரம் இலங்கை மின்சார சபையின் மின்சார விநியோகம் இந்த வரிக்கு உட்பட்டது என நிதியமைச்சு எமக்கு அறிவித்துள்ளது. அதன்படி, 2022 ஒக்டோபர் முதலாம் திகதி முதல் இலங்கை மின்சார சபையிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்யும் அனைத்து தரப்பினரிடமிருந்தும் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு வரி விதிக்க இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுக்கும்” என அவர் மேலும் விளக்கமளித்தார்.