ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து பிரதான கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் செயற்பாட்டாளர்களின் சம்மதத்தின் அடிப்படையில் அனைவரையும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் கொண்டு வருவதற்கான புதிய வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சித் தலைவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த வேலைத்திட்டத்தை விரைவில் தயாரித்து அதற்கேற்ப கட்சியின் எதிர்கால செயற்பாடுகளை ஆரம்பிக்குமாறு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன, தவிசாளர் வஜிர அபேவர்தன, பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் கலந்துகொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்ட அரசியல் கூட்டத்திலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
நாட்டில் நாளுக்கு நாள் மாறிவரும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, சமகி ஜன உட்பட சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான பிரபல பிரதிநிதிகள் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களை ஒன்று திரட்டும் பணிகளை ஆரம்பிக்குமாறும் ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.