ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களை சட்டமா அதிபரின் பரிந்துரையின் பேரில் விடுவித்தமை மக்களை ஏமாற்றும் நாடகம் எனவும், ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தாது அரசாங்கம் அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமையவே செயற்படுவதாகவும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ள தாக்குதலுக்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களம் சட்டத்தை அமுல்படுத்தாமை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக ஆர்வலர்களின் சுயமரியாதை மற்றும் சுதந்திரத்திற்காக தலையிட்டு நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்த தலைவர்களை ஊக்குவித்து நாட்டில் நீதி மற்றும் சுதந்திரத்தை நிலைநாட்டுவதில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு முனைப்புடன் செயற்பட வேண்டுமெனவும் கர்தினால் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் சிபாரிசுகளின் அடிப்படையிலான சாட்சியங்களை பொதுமக்களிடமிருந்து மறைத்து வைத்திருப்பது மற்றும் உண்மையை மறைக்க அரசாங்க அதிகாரிகள் முயற்சிப்பது இந்த நயவஞ்சக முயற்சியின் மற்றொரு படியாகும் என்றும் அவர் கூறுகிறார்.
எனவே, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சாட்சியங்களை பொதுமக்களுக்கு வெளியிடுமாறும், இந்த கொடூர கொலைகளின் பின்னணியில் உள்ள சக்திகள் குறித்து நியாயமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் விசாரணை நடத்துமாறு அரசாங்கத்திற்கும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் உத்தரவாதம் அளித்துள்ள கருத்து, பேச்சு மற்றும் அமைதியான போராட்டச் சுதந்திரத்தை அரசாங்கம் மீறுவதாக கர்தினால் குற்றம்சாட்டியுள்ளார்.
பல்கலைக்கழக மாணவர் பேரவையின் அழைப்பாளர் வசந்த முதலி மற்றும் பல்கலைக்கழக பிக்குகள் பேரவையின் அழைப்பாளர் கல்வெவ சிறிதம்மா ஆகியோர் 75 நாட்களாக குற்றஞ்சாட்டப்படாமல் அநியாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கர்தினால் தமது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளனர்.