web log free
March 29, 2024

விரைவில் உதயமாகிறது இலங்கை புலம்பெயர்ந்தோர் நிறுவனம்

வெளிநாட்டு வாழ் இலங்கையர்களின் அலுவலகம் (Office of the Overseas)  என்ற நிறுவனத்தை டிசம்பர் மாதத்திற்குள் ஆரம்பிக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வெளிவிவகார அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இந்த அலுவலகம் திறக்கப்படவுள்ளதுடன், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அதனுடன் நேரடியாக தொடர்புகொண்டு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பதற்கான சந்தர்ப்பத்தை இது வழங்கும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றவுடன் புலம்பெயர்ந்தோரிடமும், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களிடமும் நாட்டுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை லண்டனில் சந்தித்து கலந்துரையாடிய புலம்பெயர் சமூகத்தினரை புலம்பெயர்ந்தோர் என்ற பெயருக்கு பதிலாக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் என அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளார்.

புதிய அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் சிங்கள மற்றும் தமிழ் புலம்பெயர்ந்தோர் இந்த அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொண்டு இலங்கையில் முதலீடு செய்யலாம்.

மற்ற முதலீட்டாளர்களை இணைக்கும் வாய்ப்பும் உள்ளது.

புதிய அலுவலகத்தை அமைப்பதற்கான அமைச்சரவை ஆவணம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், டிசம்பர் மாத இறுதிக்குள் அலுவலகத்தை நிறுவும் பணிகள் ஆரம்பிக்கப்படும்.

கடந்த வாரம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, தலைமை அதிகாரி சாகல ரத்நாயக்க மற்றும் நீதி அமைச்சின் அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.