21வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் தமக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளதாகவும், தனது சில முக்கிய கடமைகளில் இருந்து விடுபட வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
21ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் தாம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததாகவும், தனிப்பட்ட தீர்மானமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“நாங்கள் ராஜபக்ஷ குடும்பத்திற்காக எழுக்கிறோம் என்பது எங்களிடம் உள்ள குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும். மிகவும் உண்மை. அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் மிகவும் ராஜபக்ஷவாதி. ஒரு குடும்பவாதி. அதிலிருந்து என்னை விடுவித்துக் கொள்ள முடிந்தது. இப்போது எனக்கு மஹிந்த ராஜபக்ஷவுடன் மட்டுமே தொடர்பு உள்ளது என பசில் ராஜபக்ச தெரிவித்தார்.
தேசிய பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் அரசியலுக்கு வரும் நம்பிக்கை உள்ளதா? என்ற கேள்விக்கு பசில் ராஜபக்ஷ பின்வருமாறு பதில் தெரிவித்திருந்தார்.
“உள்ளூராட்சி சபைகளில் மக்கள் பிரதிநிதிகளாக நியமிக்கப்படும் மொட்டு உறுப்பினர்களை பாதுகாக்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது. அதற்காக தீவிர அரசியல் செய்து வருகிறேன். கட்சியை ஆரம்பித்தவர்கள் அவர்கள். முதல் வெற்றியைக் கொடுத்தார்கள். அவர்களும் இங்கே எங்களுடன் இருந்தார்கள். எனவே அடுத்த உள்ளாட்சித் தேர்தலில் அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். பதவி வகிக்க எனக்கு சட்டப்படி அதிகாரம் இல்லை. இப்போது மீண்டும் வந்து நான் நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, பிரதமராக, ஜனாதிபதியாக வேண்டும் என்பதற்காக உழைத்ததாக நான் குற்றம் சுமத்த முடியாது. என்னால் சட்டப்படி அதைச் செய்ய முடியாது."