குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்படும் நபர்களை பொலிஸ் பிணையில் விடுவிப்பதில்லை என பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை பொலிஸ் பிணையில் விடுவிக்க பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிகளுக்கு அதிகாரம் இருந்ததாகவும், ஆனால் அது இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, இனிமேல் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்படாமல் நேரடியாக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் ஓட்டிச் செல்லும் வாகனத்தை சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருக்கும் மூன்றாம் தரப்பினரிடம் ஒப்படைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அதுவும் இடைநிறுத்தப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் வாகனம் விடுவிக்கப்படும்.
போக்குவரத்து டிஐஜி சகல பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிகளையும், போக்குவரத்து நிலையத் தளபதிகளையும் வரவழைத்து அண்மையில் இது தொடர்பில் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டை மாற்றியமைப்பதில் அடுத்த 6 ஆண்டுகள் மிகவும் முக்கியமானவை என பிரபல கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
Oxford மன்றத்திற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
போராட்டத்தின் போது காணப்பட்ட நிகழ்வுகளில் இளைஞர்கள் அரசியல் நோக்கிய கவனம் அதிகரிப்பதும், நாட்டுக்கு எதிரான அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கொள்கைகளுக்கு எதிராக எழுந்து நின்றமையும் விசேட நிகழ்வாகும் எனவும், எப்படி மாற்றுவது என்பதே இப்போது கேட்கப்பட வேண்டிய கேள்வி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த சமூக முயற்சியை அரசியலுடன் தொடர்புபடுத்தி அதன் மூலம் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் அது ஒரே இரவில் செய்யக்கூடிய ஒன்றல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நான்கரை வருடங்களுக்கு தேர்தலை நடத்தாமல் இருக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதாகவும், அண்மையில் பாராளுமன்றத்தில் இது தொடர்பில் கருத்துக்கள் வெளியிடப்பட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் எம்.பி கூறினார்.
தற்போதைய ஆட்சியாளர்கள் ஜனநாயகத்தை சீர்குலைத்து வருவதாகத் தெரிவித்த அவர், தேர்தலை ஒத்திவைப்பதற்கு எதிராக பல தீவிரமான தீர்மானங்கள் விரைவில் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
பல்கலைக்கழக மாணவர் பேரவையின் அழைப்பாளரின் விடுதலைக்கு எதிராக சட்டமா அதிபர் சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை ஏப்ரல் 03 ஆம் திகதி விசாரணை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மேன்முறையீட்டு மனு இன்று (27) கொழும்பு மேல் நீதிமன்றில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
காலி முகத்திடலுக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனை சந்தேக நபராக கைது செய்து வாக்குமூலங்களை பதிவு செய்யுமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தேசபந்து தென்னகோன் சார்பில் ஆஜரான ஜனாதிபதியின் சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா முன்வைத்த அடிப்படை ஆட்சேபனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது.
இலங்கை அடுத்த 25 வருடங்களுக்குள் இந்து சமுத்திரத்தின் ஏனைய நாடுகள் மற்றும் தெற்காசியாவுடன் இணைந்து பயணித்து மிகப்பெரிய அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ளும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை தெரிவித்தார்.
மேற்படி, 25 வருடகால புதிய மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் இலக்குகளை நோக்கி அரசாங்கம் நாட்டை கொண்டுச் செல்லும் என எடுத்துரைத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டை முன்னேற்றுவதற்கான தொடர்ச்சியான வேலைத்திட்டங்களில் இணைந்துகொள்ளுமாறு புலம்பெயர் மற்றும் இந்நாட்டின் இளம் சமுதாயத்தினருக்கு அழைப்பு விடுத்தார்.
ஹார்வட் பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் சூம் தொழில்நுட்பம் ஊடாக கலந்துகொண்ட போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
காலனித்துவ ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று 100 வருடங்கள் பூர்த்தி ஆகின்ற 2048 ஆம் ஆண்டில் இலங்கை நடுத்தர வருமானம் ஈட்டும் நாடாக மாறும் எனவும் அவை அனைத்தும் பொருளாதார மறுசீரமைப்புக்கான அர்பணிப்பிலேயே தங்கியுள்ளதெனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அதற்காக நமது மூலோபாய அமைவிடத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நாம் பலமான ஜனநாயக கட்டமைப்பினையும் திறந்த பொருளாதாரத்தையும் கொண்டுள்ள சிறியதொரு நாடு என்ற வகையில் அரசியல் ஸ்திரத் தன்மையை பேணி வருகின்ற அதேநேரம் எமது அயல்நாடும் நீண்ட கால உறவை பேணிவரும் நாடுமான இந்தியாவை வலயத்தின் பாதுகாவலனாக கருதுகிறோம் எனவும் சுட்டிக்காட்டினார்.
பழமையான பொருளாதார கொள்கைகளுடன் புத்துயிர் பெற்றுவருகின்ற ஆசிய வலயம் மற்றும் இந்தியாவின் அபிவிருத்திச் செயற்பாடுகளோடு கைகோர்த்துக்கொண்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் பணிகளில் இலங்கை முன்நின்று செயற்டுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.
இந்தியாவுடன் காணப்படுகின்ற சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தமாக மாற்றியமைத்துக்கொள்வது சிறந்தது என்றும் ஆசியாவின மீக நீண்ட பொருளாதார கூட்டிணைவுடன் பொருளாதார ஒப்பந்தங்களை கைசாத்திடுவதால் உலகின் மிகப்பெரிய பொருளாதார குழுவுடன் முன்னோக்கிச் செல்வதற்கான வாய்ப்பு கிட்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதன்போது, அடுத்த 25 வருடங்களுக்குள் செழிப்பான மற்றும் வலுவான நாடாக இலங்கையை கட்டியெழுப்புவதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள சமூக பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்புக்கள் தொடர்பில் ஜனாதிபதியவர்கள் விரிவான கருத்துக்களை தெரிவித்தோடு, இலங்கையின் இன வேறுபாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக அனைத்து இன மக்களுக்கும் சம அந்தஸ்த்து மற்றும் வளங்களை பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் உள்ளக பேச்சுவார்த்தைகள், நெருக்கமான புரிந்துணர்வு மற்றும் இனக் குழுக்கள் இடையிலான பல்வகைத் தன்மையை புரிந்துகொள்வதன் மூலம் தேசிய ஒற்றுமையை மேம்படுத்த முடியும் என்றும் வலியுறுத்தினார்.
அத்தோடு, செல்வதந்த நாடுகளின் மோதல் இலங்கைக்கு திறக்கப்படவுள்ள இந்திய மற்றும் ஆபிரிக்க வலயத்தின் பொருளாதார சந்தை வாய்ப்புக்களுக்கு தடையாக அமையாது என்றும் ஜனாதிபதியவர்கள் வலியுறுத்தினார்.
நாளை, மார்ச் 27ஆம் திகதி முதல், 2.9 மில்லியன் குடும்பங்களுக்கு இலவச அரிசி விநியோகத்தை அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டு மகா பருவத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் அரிசியாக மாற்றப்பட்டு அரிசி விநியோகிக்கப்படுகிறது.
மேலும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ஒன்றுக்கு 10 கிலோகிராம் அரிசியை 2 மாதங்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கோரப்பட்டவாறு விநியோகம் இடம்பெறும். உள்ளூர் விவசாயிகளை ஆதரிப்பதிலும், தேவைப்படும் குடும்பங்களுக்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் இந்தத் திட்டத்தின் முக்கியத்துவத்தை விவசாய அமைச்சர் வலியுறுத்தினார்.
திருகோணமலையில் வசித்து வந்த நிலையில் யுத்தம் காரணமாக பிரிந்து சென்ற தம்பதியர் 33 வருடங்களின் பின்னர் சந்தித்துள்ளனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அருகாமையில் ஆதரவற்ற நிலையில் இருந்த குறித்த பெண் தொடர்பில் கிடைத்த தகவலை கொண்டு வைத்தியசாலை ஊழியர்கள் பல நாட்களாக சிகிச்சை அளித்து பராமரித்து அவரின் அடையாளத்தை வெளிப்படுத்தி பெண்ணின் கணவர் மற்றும் உறவினர்களை கண்டுபிடித்துள்ளனர்.
போர்ச்சூழலில் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சில குழந்தைகளைகணவரிடம் ஒப்படைத்துவிட்டு ஒரு குழந்தையுடன் குடும்பத்தை விட்டு பிரிந்து கொழும்பிற்கு வந்த அவர், அன்றிலிருந்து 33 ஆண்டுகளாக விகாரைகள், தேவாலயங்கள், பொது இடங்களில் பலதரப்பட்டவர்களின் உதவியால் வாழ்ந்து வந்துள்ளார்.
எனினும் அவருடன் வந்த குழந்தை தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு தொடர்பான நட்டஈட்டை வழங்குவதற்காக, தன்னால் முடிந்தவரை தனது கூட்டாளிகளிடம் பணம் வசூலித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பத்தேகமவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, உரிய நட்டஈட்டை வழங்க இன்னும் மூன்று மாதங்களே உள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், குறிப்பிட்ட காலத்திற்குள் இழப்பீடு வழங்கப்படாவிட்டால், நீதிமன்றம் தன் மீது என்ன முடிவு எடுக்கும் எனத் தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
“நான் உலகை வென்று, நாட்டின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி, இந்த நாட்டை நல்ல நாடாக மாற்றிய போது, ஈஸ்டர் தாக்குதல் நிகழ்ந்து, எந்த தடயமும் இல்லாமல் போய்விட்டது. எனவே, எனக்கு ரூ. 10 மில்லியன் இழப்பீடு செலுத்த உத்தரவிட்டது."
“நான் எதையும் திருடவில்லை; நான் குண்டு வீசவில்லை."
"இந்த நாட்களில், எனக்குத் தெரிந்த நண்பர்களிடம் பணம் வசூலிக்கிறேன்."
“எனக்கு கொஞ்சம் பணம் கொடுங்கள்; எனக்கு 6 மாதங்கள்தான் அவகாசம். இப்போது மூன்று மாதங்கள் ஆகின்றன."
“இந்த 6 மாதங்களுக்குப் பிறகு என்னை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிடுமா என்று எனக்குத் தெரியவில்லை. நான் சட்டத்தில் நிபுணன் இல்லை என்றார்.
கடந்த மூன்று நான்கு தசாப்தங்களாக நாடு அதே உத்தியை நடைமுறைப்படுத்தியதால் அரச சொத்துக்களை விற்று அல்லது கடன் பெற்று இலங்கையை அபிவிருத்தி செய்ய முடியாது என NPP தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடன் பெற்று நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் 12.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற்ற போது அதனை செய்திருக்க முடியும் என பாணந்துறையில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் தெரிவித்தார்.
"அவர் இந்த முறை IMF-ல் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் மட்டுமே பெறுகிறார். அவர் 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நான்கரை ஆண்டுகளுக்குள் 12.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்று 1 பில்லியன் அமெரிக்க டொலர்களையும் பெற்றார். ஆனால், அவரால் நாட்டை வளர்க்க முடியவில்லை. நான்காண்டுகளுக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை மட்டும் பெற்றுக்கொண்டு நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து எப்படி மீட்க முடியும்,” என்றார்.
கடந்த காலத்தில் 88 அரசாங்க நிறுவனங்களை இலங்கை விற்பனை செய்துள்ளதாகத் தெரிவித்த அவர், அரச சொத்துக்களை விற்பது பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக அமையாது என்றும் கூறினார்.
அரச வளங்களை விற்பனை செய்வதன் பின்னணியில் மோசடி, ஊழல் மற்றும் துஷ்பிரயோகம் தலைவிரித்தாடுவதாக தெரிவித்த அவர், நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு இவ்வாறான செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
மோசடி மற்றும் ஊழலற்ற அரசாங்கம், திறமையான அரச சேவை, சட்டம் ஒழுங்கு, புதிய அரசியலமைப்பு மற்றும் அரச வளங்களை முழுமையாக பயன்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க, எதிர்கால NPP அரசாங்கம் எதிர்காலத்தில் அவ்வாறானதொரு அரசாங்கத்தை உறுதி செய்யும் எனவும் தெரிவித்தார்.