அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவரின் பெயரை முன்மொழிய அமைச்சர் சரோஜா போல்ராஜ் அதனை வழிமொழிந்தார்.
பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவராக ஹேமாலி வீரசேகர தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
சபை முதல்வராக பிமல் ரத்நாயக்கவும் ஆளுங்கட்சி பிரதம கொறடா நளிந்த ஜெயதிஸ்ஸவும் , எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாசவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதிய பாராளுமன்ற கூட்டத்தொடரின் சபாநாயகராக அசோக்க ரன்வல தெரிவு செய்யப்பட்டுளளார். பிரதமர் ஹரிணி இந்த பெயரை முன்மொழிய அமைச்சர் விஜித ஹேரத் அதனை வழிமொழிந்தார்.
10 ஆவது பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்று முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமாகிறது.
இன்றைய தினம் சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைக்கவுள்ளார்.
இதன்படி இன்று முற்பகல் 11.30 அளவில் ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைக்கவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுவரை காலமும் அரச நிறுவனங்களை விற்பனை செய்வதற்கு அந்த நிறுவனங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தி வருவதே காரணம் என கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களின் ஊழல், மோசடி மற்றும் இலஞ்சம் காரணமாகவே இந்த நிறுவனங்கள் இதுவரை இலாபம் ஈட்ட முடியவில்லை என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த காரணங்களை நீக்கி இலாபம் ஈட்ட முடியாவிட்டால் அதற்கான காரணங்களையும் தேட வேண்டும் என அமைச்சர் ஹந்துன்நெத்தி குறிப்பிடுகின்றார்.
நீதி அமைச்சரின் கடமை வழக்குகளை விசாரணை செய்வதோ அல்லது வழக்குகளை முன்னெடுப்பதோ அல்ல என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
“அதற்காகவே பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு உள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் வழக்குகளை முறையாக விசாரணை செய்ய உள்ளது. மனித மற்றும் தொழில்நுட்ப வசதிகளை உருவாக்கி அவர்களின் பங்கை விரைவாக நிறைவேற்றுவது நீதி அமைச்சரின் பொறுப்பாகும்.
அரசியல் வாதிகள் தொழில் முடிவுகளில் தலையிடக் கூடாது. அதை வெற்றிகரமாகச் செய்வதற்கு நமது நாட்டின் சட்ட அமலாக்க அமைப்புகளுக்குத் தேவையான ஆதரவை வழங்க வேண்டும்."
சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக இலங்கையில் உள்ள பெரிய பல்பொருள் அங்காடிகள் அரிசியின் வெளியீட்டை கடுமையாக மட்டுப்படுத்தியுள்ளதுடன் ஒருவருக்கு மூன்று கிலோ அரிசியை மாத்திரமே விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஒருவருக்கு சம்பா, நாடு, கெக்குலு போன்ற மூன்று கிலோ அரிசி மாத்திரமே விடுவிக்கப்படும் என ஏற்கனவே காட்சிப்படுத்தியிருந்தமை காணப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியலில் இருந்து நாடாளுமன்றத்துக்கு பிரவேசித்து எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்கவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கு மேலும் பல சமகி ஜன பலவேக எம்.பி.க்கள் ஆதரவளிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
சஜித் பிரேமதாசவுடன் இணைந்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு குறிப்பிடத்தக்க சித்தாந்த சவாலை முன்வைக்க முடியாது என அந்த எம்.பி.க்கள் குழுவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கருதுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
அந்த நிலைமையின் அடிப்படையில் அவர்களில் ஒரு குழு ரணில் விக்கிரமசிங்கவின் எதிர்க்கட்சித் தலைமையின் கீழ் செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் அறியமுடிகிறது.
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியலுக்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவி விலகியதையடுத்து, அந்த வெற்றிடத்துக்காக ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்குள் நுழையும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
புதிய ஜனநாயக முன்னணி தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொருத்தமானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அனுபவமிக்க தலைவரான முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன அதற்கு பொருத்தமானவர் என பந்துல குணவர்தன கருத்து தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தான் பொருத்தமானவர் என நிமல் லான்சா அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பு இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்தது.
அரசாங்கத்தில் எம்.பி.யின் சம்பளம் குறித்த உண்மையான கதையை இலங்கை நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனை கூறியுள்ளார்.
தற்போது, ஒரு எம்.பி.க்கு கிட்டத்தட்ட 54,000 உதவித்தொகை பெற உரிமை உள்ளது, இது தவிர, நாடாளுமன்றக் கூட்டங்கள் நடைபெறும் நாட்களில் வருகைப் படியாக 2,500 ரூபாயும், கூட்டங்கள் நடைபெறாத நாட்களில் குழுக்களில் கலந்துகொள்வதற்காக உதவித்தொகையாக 2,500 ரூபாயும் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.
எரிபொருள் கொடுப்பனவு தூரத்தை அடிப்படையாகக் கொண்டது, இது ஒரு சூத்திரத்தின்படி கணக்கிடப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
மேலும், பாராளுமன்றத்தில் இருந்து 40 கிலோமீற்றருக்குள் வீடு இல்லாதவர்கள் விண்ணப்பித்து பாராளுமன்ற உறுப்பினர் வீடுகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், மதிவெலவில் 108 வீடுகள் உள்ளதாகவும் ஆளும் கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க திருமதி குஷானி ரோஹணதீர தெரிவிக்கின்றார். கோரிக்கைகளை முதலில் முன்வைக்கும் வரிசையில் வீடுகள் வழங்கப்படும்.
அத்துடன், வீட்டு வாடகையாக ரூபா 2,000 செலுத்தப்படும் எனவும், மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்களை சம்பந்தப்பட்ட உறுப்பினர் செலுத்த வேண்டும் எனவும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் மேலும் குறிப்பிடுகின்றார்.
மேலும், ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் மருத்துவ வசதிகளை பெற்று கொடுப்பதன் மூலம் கொடுப்பனவுகளில் இருந்து தொகையை குறைக்க பாராளுமன்றமும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சும் இணைந்து வசதிகளை செய்துள்ளதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள ரவி கருணாநாயக்கவின் வீட்டுக்கு முன்பாக பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அவரது வீட்டின் அருகே பரபரப்பு ஏற்படக்கூடும் என்ற தகவலின் அடிப்படையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி 03 மாவட்ட ஆசனங்களைக் கைப்பற்றியதுடன் பெற்ற மொத்த வாக்குகளின்படி இரண்டு தேசியப்பட்டியல் எம்.பி பதவிகளையும் கைப்பற்றியது.
புதிய ஜனநாயக முன்னணியின் செயலாளரினால் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்றுக்கு ரவி கருணாநாயக்க பரிந்துரைக்கப்பட்டார்.
இது தொடர்பில் அவர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்ததுடன், அதன் பிரகாரம் புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக ரவி கருணாநாயக்கவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (18) வர்த்தமானியில் வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், புதிய ஜனநாயக முன்னணியின் ஒன்றிணைந்த கட்சிகளின் அனுமதியின்றி கட்சியின் செயலாளர் அவரை தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த வகையில் செயலாளர் தன்னிச்சையாக செயற்பட்டுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்த முன்னணியின் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.
தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ரவி கருணாநாயக்கவின் நியமனம் வழமையானதல்ல என அந்த முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பல கட்சிகள் தெரிவித்துள்ளன.
மேலும் ரவி கருணாநாயக்கவின் பெயர் நாடாளுமன்றத்தின் தேசியப்பட்டியலில் உள்ளடக்கப்பட்டமை தொடர்பில் பல தரப்பினரும் ஆட்சேபனைகளை முன்வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அசாத் சாலி, ரவியின் வீட்டை முற்றுகையிட்டு இந்த முடிவை திரும்பப் பெற முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.
ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு முன்பாக பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக இன்று சில குழப்பங்கள் ஏற்படும் என ஊகிக்கப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.