–மத்திய கிழக்குப் பதற்றம்: ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு கோரிய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையால் உலக எண்ணெய் சந்தையில் விலைகள் கடுமையாக ஏற்ற இறக்கமடைந்து வரும் நிலையில், அதன் தாக்கத்தை குறைக்கும் புதிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுடன் அவசர சந்திப்பொன்றை கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் டி.ஜே. ராஜகருணா, உலக எண்ணெய் சந்தையில் நிலவும் சூழ்நிலை இலங்கைக்கு கடுமையான அபாயத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதாகவும், தற்போதைய பாதகமான நிலை குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் என்றும் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.
முழுமையாக எரிபொருள் இறக்குமதியைச் சார்ந்துள்ள இலங்கை போன்ற நாட்டிற்கு இது மிகப்பெரிய சவாலாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாத தொடக்கத்துடன் ஒப்பிடுகையில், டீசல் விலை 45% உயர்ந்துள்ளதுடன், பெற்றோல் விலை 30% உயர்ந்துள்ளதாகவும், அதேவேளை கச்சா எண்ணெய் விலையும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாட ஜனாதிபதியிடம் சந்திப்பு கோரியுள்ளோம். எரிபொருள் பயன்பாட்டை குறைப்பது கட்டாயமான தேவையாகியுள்ளது,” என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய விலை நிலவரத்தில் உள்நாட்டு சந்தையில் செயல்படும் பிற சில்லறை எரிபொருள் விநியோக நிறுவனங்களும் எரிபொருள் விற்பனையில் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மற்றும் உக்ரைன் தொடர்பான மோதல்களால் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய கிழக்கு, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா பிராந்தியங்களில் கச்சா எண்ணெய் விலை கடந்த இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்த வாரம் உயர்ந்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சில வகை கச்சா எண்ணெய்களின் விலை ஒரு பீப்பாய்க்கு அமெரிக்க டொலர் 110-ஐ நெருங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனுடன், எல்-நினோ காலநிலை காரணமாக ஏற்பட்ட வறட்சியால் நீர்மின் உற்பத்தித் திறன் குறைந்திருப்பதும், மின்சார உற்பத்திக்கான எரிபொருள் தேவை மேலும் அதிகரித்திருப்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
போதுமான நீர்மின் உற்பத்தி இல்லாததால், மின்சார உற்பத்திக்காக தினந்தோறும் கையிருப்பில் உள்ள அதிகளவான எரிபொருளை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது இலங்கை எதிர்நோக்கும் மற்றொரு கடுமையான சவாலாக இருப்பதாகவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் தெரிவித்துள்ளார்.




