இலங்கையில் இடம்பெற்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நிலையில், வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள 93 பேருக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு அறிவிப்புகள் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.
“நாடு ஒன்றிணைந்து” தேசிய நடவடிக்கை தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
கடுமையான குற்றங்களுடன் தொடர்புடையதாகத் தேடப்பட்டு வரும் சந்தேகநபர்களை சர்வதேச ஒத்துழைப்பின் மூலம் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளில், அத்துடன் இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில், இன்டர்போல் சிவப்பு அறிவிப்புகளின் அடிப்படையில் 38 சந்தேகநபர்கள் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.
மேலும், பொலிஸ் மா அதிபரின் நேரடி தலையீட்டின் அடிப்படையில் மேலும் 35 பிரபல குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.




