உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பது தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவ சபையிலோ, தேசிய நிறைவேற்றுக் குழுவிலோ அல்லது தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டு குழுவிலோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கலந்துரையாடப்படவில்லை என அதன் உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான லால் விஜேநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்ற கூட்டமொன்றில் இந்த விடயம் முன்வைக்கப்பட்டபோது, அதற்கு தான் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்தக் கூட்டத்திற்குப் பின்னர் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ஒருவர் தன்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு, இந்த விடயம் தொடர்பாக அமைதியாக இருக்குமாறு தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனிப்பட்ட கருத்தை வெளியிட்டுள்ள அவர், நிறைவேற்றுக் குழு உறுப்பினர் ஒருவர் தன்னிடம், “அவர்களை உள்ளே கொண்டு வர வேண்டுமென்றால் இவரை பதவியில் வைத்திருக்க வேண்டியுள்ளது” எனக் கூறியதாக தெரிவித்துள்ளார்.
மேற்படி கூட்டத்தின் முடிவில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவை நோக்கி, “அவர் கூறிய அதே விடயத்தைத்தான் நீங்கள் வேறு வார்த்தைகளில் கூறினீர்கள்” என தான் தெரிவித்ததாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.




