தற்போது நிலவும் கடுமையான வெப்பமான காலநிலை மற்றும் பாடசாலை விடுமுறை காலத்தை கருத்திற்கொண்டு, குழந்தைகளின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் பெற்றோர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக குழந்தைகள் நீரிழப்புக்கு உள்ளாகும் அபாயம் அதிகமாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், நீண்ட நேரம் கடுமையான வெயிலில் விளையாடுவதால் உடலில் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்றும், சில சந்தர்ப்பங்களில் அதிர்ச்சி நிலை ஏற்படுவதுடன், இதயம் மற்றும் மூளையிலும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனவும் வைத்தியர் எச்சரித்துள்ளார்.
நீரிழப்பின் ஆரம்ப அறிகுறிகளாக தலைவலி, வாந்தி, உடல் வலி, தூக்கமின்மை அல்லது மந்தநிலை, உடல் அசௌகரியம், பசியின்மை மற்றும் சிறுநீர் அடர் நிறமாக மாறுதல் ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
எனவே, வெளியில் விளையாடும் குழந்தைகளுக்கு போதுமான அளவு தண்ணீர் வழங்குவது மிகவும் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.
தண்ணீருக்கு மேலதிகமாக இளநீர், ஜீவனி, எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பானங்கள், மாம்பழம், மாதுளை, கஞ்சி மற்றும் சூப் போன்ற இயற்கையான திரவ உணவுகளையும் குழந்தைகளுக்கு வழங்குவது முக்கியம் என வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சூரிய வெப்பம் அதிகமாக இருக்கும் நேரங்களில் இலகுவான பருத்தி ஆடைகளை அணிவித்தல், தொப்பி அணிவித்தல் மற்றும் மர நிழல் போன்ற குளிர்ச்சியான இடங்களில் ஓய்வெடுக்கச் செய்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாடசாலை விடுமுறை காரணமாக குழந்தைகள் அதிக நேரம் வீடுகளில் தங்கியிருப்பதால், அவர்களின் பாதுகாப்பு தொடர்பிலும் பெற்றோர் முன்னெப்போதையும் விட அதிக கவனம் செலுத்த வேண்டும் என டாக்டர் தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.




