கடுமையான பொருளாதார மற்றும் கொடுப்பனவு சமநிலை நெருக்கடியைத் தொடர்ந்து, இலங்கைப் பொருளாதாரம் தற்போது மீட்சியடைந்து வருவதுடன், நெருக்கடிக்கு முன்னர் காணப்பட்ட நிலையை அண்மித்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இராஜதந்திரிகள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறுகிய காலத்திற்குள் இவ்வாறான வேகமான பொருளாதார மீட்சியை அடைய முடிந்திருப்பது ஒரு குறிப்பிடத்தக்க சாதனை எனவும் மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் இறையாண்மை கடன் தரப்படுத்தலை (Sovereign Credit Rating) மேலும் உயர்த்துவதற்காக சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனங்கள் மூன்றுடனும் தற்போது பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல், வெளிநாட்டு செலாவணி கையிருப்பை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் அரச கடனை மறுசீரமைத்தல் ஆகிய நடவடிக்கைகள் மூலம் நாட்டின் பேரண்டப் பொருளாதார ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
பின்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட பொருளாதார ஸ்திரப்படுத்தல் திட்டங்களின் ஊடாக வெளிநாட்டு கையிருப்பை மீண்டும் கட்டியெழுப்ப முடிந்துள்ளதாகவும், அதேவேளை பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் நிதி நிலுவைகளை மீட்டெடுக்கவும் முடிந்துள்ளதாகவும் மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.
கடுமையான கொடுப்பனவு சமநிலை நெருக்கடியை எதிர்கொண்ட பின்னர், மிகக் குறுகிய காலத்திற்குள் பொருளாதாரத்தை மீட்டெடுத்த நாடாக இலங்கை சர்வதேசத்திற்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக விளங்குகிறது எனவும் மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.




