தினசரி சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதன் காரணமாக இலங்கையின் பாடசாலைகளில் 10ஆம் தரம் முதல் 13ஆம் தரம் வரை கல்வி கற்கும் மாணவர்களில் 60.1% பேர் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
களனி பல்கலைக்கழகம் மற்றும் அவுஸ்திரேலியாவின் மொனாஷ் பல்கலைக்கழகம் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் மூலம், பாடசாலை மாணவர்களிடையே காணப்படும் இந்த மன அழுத்த நிலை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 10ஆம் தரம் முதல் 13ஆம் தரம் வரையிலான மாணவர்களில் 24.1% பேருக்கு மருத்துவ ரீதியாகக் கவனிக்க வேண்டிய அளவிலான மனச்சோர்வு அறிகுறிகள் காணப்படுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
தினசரி சமூக ஊடகப் பயன்பாட்டுக்கு மேலதிகமாக, கல்வி நடவடிக்கைகளில் ஏற்படும் அழுத்தம், உடல் செயல்பாடுகள் குறைதல் மற்றும் குடும்பச் சூழலில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகள் ஆகியவையும் இந்த நிலை ஏற்படுவதற்கு முக்கிய காரணிகளாக அமைந்துள்ளதாக குழந்தை மனநல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, வயதில் மூத்த மாணவர்கள் மற்றும் பெண் மாணவிகள் இந்த மன அழுத்தத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மாணவர்களின் இந்த மனநல சவால்களுக்கு தீர்வு காண்பதற்காக, குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் மனநலம் தொடர்பான நிபுணத்துவ மருத்துவ ஆலோசனைகளை வழங்குவதுடன், பாடசாலை மற்றும் தேசிய மட்டங்களில் இந்த விடயத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என ஆய்வை மேற்கொண்ட மனநல நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




