வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் தங்களது சொந்த வீட்டைக் கட்டுவதற்கோ அல்லது வீடு ஒன்றை வாங்குவதற்கோ உதவும் வகையில் ‘எதெர திரிய’ (Ethera Diriya) என்ற புதிய வீட்டுக் கடன் திட்டம் இன்று (10) உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.500,000 முதல் ரூ.10 மில்லியன் வரை சலுகை வட்டி வீதத்தில் வீட்டுக் கடன்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இந்தக் கடனுக்காக செலுத்த வேண்டிய வட்டியின் ஒரு பகுதியை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) மீளச் செலுத்தும் வகையில் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வெளிநாடுகளில் உழைக்கும் இலங்கையர்கள் தங்களது வருமானத்தை நாட்டில் வீடமைப்புக்காக பயன்படுத்தும்போது ஏற்படும் நிதிச்சுமை கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்தக் கடன்களை 10 ஆண்டுகள் வரையான காலப்பகுதியில் திருப்பிச் செலுத்துவதற்கான வசதியும் வழங்கப்படவுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் அரச மற்றும் தனியார் வங்கிகள் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் தங்களது உழைப்பின் மூலம் ஈட்டும் பணத்தை பாதுகாப்பான முறையில் நாட்டில் வீடமைப்புத் துறையில் முதலீடு செய்வதற்கு உதவும் நோக்கில் இந்த புதிய வீட்டுவசதி ஆதரவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகின்றது.




