தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கி வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!
கொழும்பு உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் மற்றொரு பெண்ணுக்கு எதிராக, தங்க முலாம் பூசப்பட்ட T-56 ரக துப்பாக்கி தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், இரு சந்தேகநபர்களையும் பிணையில் விடுவிக்க உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கு 2025 மே 20ஆம் திகதி வெள்ளவத்தை – ஹேவ்லொக் சிட்டி குடியிருப்பு வளாகத்தில் பெண்ணொருவரின் பயணப் பையில் இருந்து தங்க நிறத்தில் காணப்பட்ட T-56 துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.
சம்பவம் தொடர்பாக 40 மற்றும் 68 வயதுடைய இரு பெண்கள் ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர். பின்னர் விசாரணைகள் பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் (TID) ஒப்படைக்கப்பட்டன.
விசாரணைகளின் தொடர்ச்சியாக துமிந்த திஸாநாயக்கவும் கைது செய்யப்பட்டிருந்தார். எனினும், 2025 ஜூலை 29ஆம் திகதி அவருக்கு எதிராக நேரடி அல்லது சூழ்நிலைச் சாட்சிகள் போதுமானதாக இல்லை எனக் குறிப்பிட்டு, மவுண்ட் லவினியா நீதவான் நீதிமன்றம் அவரை வழக்கிலிருந்து விடுவித்திருந்தது.
பின்னர் மேலதிக விசாரணைகள் மற்றும் புதிய வாக்குமூலங்களின் அடிப்படையில், சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலின்படி துமிந்த திஸாநாயக்க மீண்டும் சந்தேகநபராக இணைக்கப்பட்டார்.
2026 ஜூலை 10ஆம் திகதி, அவருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது அவர் இரண்டு தனிப்பட்ட பிணைப் பத்திரங்களின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாகவே தற்போது கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.




