கல்வி கற்பதன் உண்மையான நோக்கம் உலகை சரியாகப் புரிந்துகொண்டு, அதனை மேலும் சிறந்ததாக மாற்றுவதாகும் என விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த தெரிவித்துள்ளார்.
கல்வி நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர், தனது கடந்தகால அனுபவங்களை நினைவுகூர்ந்தபோது, உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலத்தில், அப்போது தடை செய்யப்பட்டிருந்த ஜனதா விமுக்தி பெரமுன (JVP) அமைப்பு நடத்திய ஏழு நாள் அரசியல் கல்வி முகாமில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததாகத் தெரிவித்தார்.
அனுராதபுரம் மல்வத்து ஓயா அருகே, வாழை மற்றும் கத்தரிக்காய் பயிர்களால் சூழப்பட்டிருந்த சிறிய குடிசையில், மண் தரையில் பாய்களை விரித்து அந்த ஏழு நாள் குடியிருப்பு கல்வியைப் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
அங்கு அப்பள்ளியின் இளம் தலைமையாசிரியர் மாணவர்களிடம் கேட்ட அடிப்படையான கேள்வி “ஏன் கற்கிறீர்கள்?” என்பதாக இருந்ததாகவும் அமைச்சர் கூறினார்.
முதலாம் தரம் முதல் உயர்தரம் வரை உத்தியோகபூர்வ கல்வி முறையில் தனக்குக் கிடைக்காத பதில் அந்த “உத்தியோகபூர்வமற்ற பள்ளியில்” கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.
“உலகைப் புரிந்துகொள்வதற்காகக் கற்கிறோம். உலகைப் புரிந்துகொள்வது, தற்போது இருப்பதைவிட சிறந்த முறையில் உலகை உருவாக்குவதற்காக அல்லது மாற்றுவதற்காக” என அந்த இளம் தலைமையாசிரியர் வழங்கிய பதில் தனது வாழ்நாள் முழுவதும் வழிகாட்டியாக அமைந்ததாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், இலங்கையின் அரசியல் கட்சிகளில் தமது உறுப்பினர்களுக்கு முறையான கல்வியை வழங்கிய ஒரே அரசியல் கட்சி ஜனதா விமுக்தி பெரமுன எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கையில் கிடைக்கும் ஒவ்வொரு புத்தகத்தையும் வாசிப்பதை விட, தங்களது அடிப்படை அறிவை உருவாக்குவதற்கும் இலக்குகளை அடைவதற்கும் தேவையான குறிப்பிட்ட அறிவைத் தேர்ந்தெடுத்து கற்க வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
தேவையற்ற விடயங்களைத் தவிர்த்து, அத்தியாவசிய அறிவை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கையை கட்டியெழுப்ப வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.




