நாட்டின் எதிர்கால வாரிசுகளான சிறுவர்களுக்கு சிறந்த சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
தற்போது போதைப்பொருள் அச்சுறுத்தல் கொழும்பிலுள்ள பாடசாலைகளை மட்டுமன்றி, கிராமப்புற பாடசாலைகளையும் வேகமாக ஆக்கிரமித்து, பாரிய சமூகப் பிரச்சினையாக மாறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தினசரி 14 முதல் 15 வயதுக்குட்பட்ட ஆண் மற்றும் பெண் மாணவர்கள் இருதரப்பினரும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக பொலிஸாரால் கைது செய்யப்படும் நிலை காணப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, எதிர்கால சந்ததியினரின் நலனைக் கருத்திற்கொண்டு, நாட்டில் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிராக பாரிய நடவடிக்கைத் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இந்த வேலைத்திட்டத்திற்கு தேவையான தலைமைத்துவத்தை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் தடுப்புக்கான தேசிய சபை, மாவட்ட சபைகள், பிரதேச செயல்பாட்டு குழுக்கள் மற்றும் 14,150 பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்கள் ஊடாக முழு சமூகமும் நான்கு மட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எதிர்கால சந்ததியினருக்கு நல்லதொரு நாட்டை உருவாக்கிக் கொடுக்க முடியாவிட்டால், வானளாவிய மாளிகைகளை கட்டினாலும் அதனால் எந்தப் பயனும் இல்லை என ஆனந்த விஜேபால வலியுறுத்தியுள்ளார்.
சிறுவர்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் என்ற வகையில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.




