தனியார் வங்கியொன்றின் நிர்வாக அதிகாரியிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் மூலம், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் மற்றொரு வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘கிரிஷ்’ பரிவர்த்தனை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கடந்த 06ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரி நீதிமன்றத்தில் தெரிவித்ததாவது:
“Ceylone Premier Sports Limited என்ற பெயரில் ஒரு வங்கிக் கணக்கு உள்ளது. அந்த நிறுவனமானது நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எனினும், அவர் அந்த நிறுவனத்தில் எந்தவொரு பதவியையும் வகிக்கவில்லை. அந்த நிறுவனத்தின் தலைவராக நிமல் பெரேரா செயற்பட்டுள்ளார்.
மேலும், இந்த வழக்கின் முதலாவது சந்தேகநபரான இந்திய பிரஜை அமித் கட்டையார் மற்றும் இரண்டாவது சந்தேகநபரான ராஜேந்திர பிரசாத் குப்தா ஆகியோரிடம் விசாரணைக்குத் தேவையான வாக்குமூலங்களைப் பெறுவதற்காக பல சந்தர்ப்பங்களில் அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. எனினும், அவர்களிடமிருந்து எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை.
எனவே, அவர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பெறுவதற்காக பிடியாணை பிறப்பிக்குமாறு கோருகிறோம். அடுத்தகட்ட நடவடிக்கையாக அவர்களுக்கு எதிராக சர்வதேச சிவப்பு பிடியாணை பெற எதிர்பார்க்கிறோம்.
மேலும், 2012/12/15ஆம் திகதி கிரிஷ் டிரான்ஸ்வொர்க் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு நான்காவது சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷ கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கார்ல்டன் சுப்பர் 7 ரக்பி போட்டித் தொடருக்காக நிமல் பெரேரா வழங்கிய பணத்திற்கு நன்றி தெரிவித்து அந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்தக் கடிதம் தற்போது மேல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கொன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நான்காவது சந்தேகநபரின் கையெழுத்தை பரிசோதிக்க எதிர்பார்க்கிறோம். சந்தேகநபர் ஊழல் தடுப்புச் சட்டத்தின் 149ஆவது பிரிவின் கீழ் பணிப்பாளர் வழங்கிய சான்றிதழுடனும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு கோருகிறோம்.”
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர்களின் சட்டத்தரணிகள் தமது வாதங்களை முன்வைத்த பின்னர், கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம, நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 16ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.




