திருட்டு, மோசடி மற்றும் ஊழலில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
சர்வதேச தேங்காய் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 250 இளநீர் கிராமங்களை நிறுவும் வேலைத்திட்டத்தின் கீழ், தெஹிகமவில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அல்லது அமைச்சர் உள்ளிட்ட எவருக்கும் சட்டத்தின் கீழ் விசேட சலுகைகள் கிடையாது எனக் குறிப்பிட்ட அமைச்சர், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின்போது அவற்றுடன் தொடர்புடைய நபர்களுடன் உறவுகளைப் பேண வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளால் பலர் அரசாங்கத்திற்கு எதிரானவர்களாக மாறியுள்ளதாகவும், எனினும் அதற்காக அரசாங்கம் அஞ்சப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு மக்கள் சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துவது அவசியம் எனத் தெரிவித்த அமைச்சர், நாட்டை வளமான நாடாக மாற்றுவதற்கான பயணத்தில் திருட்டு, மோசடி மற்றும் ஊழல் ஆகியவை முக்கிய தடைகளாக உள்ளதாகவும் வலியுறுத்தியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், எதிர்வரும் மூன்று ஆண்டுகளிலும் நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு, சரியான கொள்கைகளுடன் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அமைச்சர் சமந்த வித்யாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.




