சீருடை விவகாரத்தைப் பயன்படுத்தி நாசகாரச் செயல்களிலும் நாட்டை ஸ்திரமற்ற நிலைக்குக் கொண்டுசெல்லும் நடவடிக்கைகளிலும் ஈடுபடும் பல்வேறு நபர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நபர்கள் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினரை ஈடுபடுத்தி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், நாட்டை ஸ்திரமற்ற நிலைக்குக் கொண்டுசெல்ல எவ்விதத்திலும் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், அமைதியான பேரணிகள் மற்றும் சுதந்திரமான ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு அரசாங்கம் எவ்வித தடையையும் விதிக்கவில்லை என்றும், அந்த உரிமை முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ், ஓரிரு நாட்கள் மட்டுமன்றி இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வரையிலும் கூட, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அமைதியாக அமர்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையில், சீருடை விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி விசேட குழுவொன்றை நியமித்து, தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இருப்பினும், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுக்கு முரணாக ஜனாதிபதி செயற்பட மாட்டார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் சட்டத்திற்கு முரணாக வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்புகளை நீதிமன்றமே இரத்துச் செய்த சம்பவங்களையும் நினைவுபடுத்திய அமைச்சர் ஆனந்த விஜேபால, சட்டத்தின் ஆட்சிக்கு மேலாகச் சென்று எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என மேலும் வலியுறுத்தியுள்ளார்.




